'சதுரங்க வேட்டை-2' படத்துக்கு டப்பிங்பேச அர்விந்த்சாமி மறுப்பு!

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் முதல், சிறிய நடிகர்கள் வரை ஹீரோவாக ஒரு நடிகரை ஒப்பந்தம் ஆகும்போதே சம்பளத்தில் பெருந்தொகை ஒன்றை அட்வான்ஸாக வாங்கிவிடுவது வழக்கம். கோலிவுட்டின் இந்த தொன்றுதொட்ட பழக்கத்துக்கு சற்று மாறுபட்டவர்  நடிகர் அர்விந்த்சாமி. முதலில் கதையைக் கேட்டுப் பிடித்திருந்தால் உடனே ஒப்புக்கொண்டு கால்ஷீட் தேதிகளை கொடுத்துவிடுவார். அந்தப்பட பூஜையின்போதுகூட சம்பளத்தின் அட்வான்ஸ் தொகையை வாங்கமாட்டார், அதன்பிறகு படப்பிடிப்புக்கு புறப்படுவதற்கு முதல்நாள் ஒரு சிறிய தொகையை அட்வான்ஸ் பணமாக பெற்று நடித்துக்கொடுப்பது அர்விந்த்சாமியின் பழக்கம்.

இதே பாலிஸியை  'சதுரங்க வேட்டை-2'  படத்திலும் கடைப்பிடித்தார். நிர்மல்குமார் இயக்கத்தில் அர்விந்த்சாமி, த்ரிஷா நடிக்கும் இந்த திரைப்படம்  முழுவதும் முடிந்துவிட்டது. பொதுவாக நடிகர், நடிகைகள் தாங்கள் நடித்த படத்துக்கு டப்பிங் பேசும் முன்னரே முழுச்சம்பளத்தையும் வாங்கிய பிறகே பேசுவது இயல்பு.  இப்போது 'சதுரங்க வேட்டை-2' படத்துக்கு டப்பிங் பணிகள் இருக்கும் சூழ்நிலையில், அர்விந்த்சாமிக்கு பேசிய சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியைக்கூட  தயாரிப்பாளர் தரப்பு தரவில்லை. அர்விந்த்சாமி முழுச்சம்பளத்தையும் கேட்கவில்லை; பாதி பணத்தையாவது செட்டில் செய்யுங்கள் என்று நாசூக்காக தனது தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லியும் தயாரிப்பாளர் உணர்ந்துகொள்ளாததால் அர்விந்த்சாமி டப்பிங் பேசுவாரா? மாட்டாரா? என்ற இழுபறி சூழ்நிலையில் 'சதுரங்க வேட்டை-2' திரைப்படம் இருந்துவருகிறது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!