ஏர் கலப்பையை சாட்சியாகவைத்து நடந்த திருமணம்! நெகிழவைத்த மணமக்களின் பேச்சு

அரியலூரில் அக்னிக் குண்டம் இல்லாமல், யாகம் வளர்க்காமல் விவசாயிகளை வாழவைக்கும் ஏர் கலப்பையை சாட்சியாக வைத்து, திருமணம் நடை பெற்றது.  மணமக்கள்,'எங்கள் சந்ததியினருக்கும் இதே முறையில் திருமணம் நடத்துவோம்' என்று உறுதிமொழி எடுத்துக்கொண்ட சம்பவம், ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்தத் திருமணத்தில், உறவினர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள குவாகம் கிராமத்தைச் சேர்ந்த அன்பரசன் என்பவருக்கும், கீழமாளிகை கிராமத்தைச் சேர்ந்த அருணாசலம் என்பவரது மகள் துர்காதேவி என்பவருக்கும் விவசாயிகளைப் பெருமைப்படுத்தும் விதமாக, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில், இந்த சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது.

இந்தத் திருமணத்தைப் பற்றி விஸ்வநாதன் பேசத்தொடங்கினார். தமிழர்களின்  மரபுப்படி விவசாயத்தை அடையாளம் காட்டவும், 'விவசாயத்தைக் காப்போம்' என்று ஏர்கலப்பைக்கு மாலையிட்டு, பூவும் பொட்டும் வைத்து, அதைச் சுற்றிவந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டு, தமிழர் பண்பாட்டோடு, அரசாணிக்குப்பதிலாகவும், அம்மி மிதிப்பதற்குப் பதிலாகவும் ஏர்கலப்பையை முன்னிறுத்தி நடைபெற்றது. இதேபோன்று இனி நடைபெறும் அனைத்துத் திருமண நிகழ்ச்சிகளையும் இதுபோன்ற அடையாளத்தோடு நடத்துவோம் என்றனர். மணமக்களை வாழ்த்த வந்த விவசாயி ஒருவர், ஆட்டுக்குட்டி ஒன்றை அன்பளிப்பாக வழங்கி, ஆடு பெருகுவதுபோல மண மக்களின் வாழ்வும், வளமும் பெருக வேண்டும் என்று வாழ்த்தினார்.

இந்த திருமணம், வரலாற்றுச் சிறப்புமிக்கதாக நடைபெற்றுள்ளது. திருமணத்தைப் பற்றி புதுமணத்தம்பதி உணர்வுபொங்க பேசத்தொடங்கினார்கள். "இன்றைய காலகட்டத்தில் விவசாயம் அழிந்துகொண்டு வருகிற காரணத்தால், எனது திருமணம் இன்று அக்னி இல்லாமல் விவசாயம் முறையில் ஏர் கலப்பையை வைத்து திருமணத்தை முடித்தோம். ஏனென்றால்,  நானும் எனது குடும்பமும் ஏர் கலப்பையை வைத்துதான்  விவசாயம் செய்துவருகிறோம். இதனால்தான் எங்கள் குடும்பம் முன்னேற்றத்துடன் உள்ளது. வித்தியாசமான முறையில் திருமணத்தை நடத்த இருவரும் சம்மதித்தே பெரியவர்களிடம் தெரிவித்தோம்.

எங்களது தாத்தா, பாட்டி காலத்திலிருந்து இன்று வரை விவசாயம் எங்களது வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. எங்கள் திருமணம் போன்றுதான் எங்களது சந்ததியினருக்கும் திருமணம் செய்துவைப்போம்" என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!