`எங்களைக் குரங்குகளிடமிருந்து காப்பாற்றுங்கள்' - கலெக்டரிடம் அபயக் குரல் எழுப்பிய கிராம மக்கள்

தஞ்சை மாவட்டம், வடகால் கிராம மக்கள் கடந்த சில மாதங்களாகக் குரங்குகளின் அச்சுறுத்தலால் உயிர் பயத்தில் தவித்து வருகிறார்கள். ஊர்மக்கள் ஒன்றாகத் திரண்டு தஞ்சை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து எங்களைக் குரங்குகளிடமிருந்து காப்பாற்றுங்கள்' என அபயக் குரல் எழுப்பியுள்ளார்கள்.

இது குறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த லெனின் என்பவர் கூறுகையில், ‘50-க்கும் மேற்பட்ட குரங்குகள் எங்க ஊருக்குள்ள புகுந்து அட்டகாசம் செஞ்சிக்கிட்டு இருக்குங்க. ஓடுகளைப் பிரிச்சு, வீட்டுக்குள்ளார இறங்கி, சமைச்சு வச்ச பாத்திரங்களை எல்லாம் தூக்கிக்கிட்டு போயிடுது. துணிகளை எல்லாம் கிழிச்சிப்போட்டுடுது. அடிச்சி விரட்டலாம்னு குச்சியை எடுத்தால், பாய்ஞ்சி வந்து கடிக்க வருது. ஸ்கூல் பசங்க தின்பண்டங்கள் சாப்பிட்டுக்கிட்டு இருந்தால் புடுங்க வருது. நெற்கதிர், தென்னை மரத்துல உள்ள தேங்காய் குருத்துகள், புளியமரத்துல உள்ள பிஞ்சுகள், காய்கறிகள் எல்லாத்தையும் கடிச்சிப் போட்டுடுது. ஒரு குரங்கு, இரண்டுனா சமாளிக்கலாம். ஒரு குரங்கு கூட்டமே ஊருக்குள்ள நடமாடினால் நாங்க எப்படி நிம்மதியா வாழ்றது. எப்ப என்ன நடக்குமோனு பயந்துக்கிட்டே வாழ வேண்டியதாயிருக்கு. கடந்த 8-ம் தேதி கலெக்டர்கிட்ட மனு கொடுத்தோம். ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கலை. இரண்டாவது முறையாக மறுபடியும் மனு கொடுத்திருக்குறோம்” என ஆதங்கத்தோடு பேசினார்.

இவர்களது பிரச்னை குறித்து, தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலரிடம் தெரிவித்தோம். 'உடனடியாக நடவடிக்கை எடுக்குறேன்' என்று தெரிவித்தனர். அவர் ஃபோனை வைத்தவுடன் அடுத்த நிலையில் உள்ள வன அதிகாரிகள், முழு விவரங்களையும் நம்மிடம் கேட்டு குறித்துக்கொண்டார்கள். ‘முதல்ல ஊருக்குள் சென்று குரங்குகளைப் பிடிக்குறதுக்கானா வியூகங்களை முடிவு செஞ்சு, அதுக்குப் பிறகு, கூண்டுகளோடு போறோம்' என்றார். மறுநாள் மதியம் நம்மை லெனின் தொடர்புகொண்டார். சார், விகடனுக்குதான் நன்றி சொல்லணும். கலெக்டர்க்கிட்ட மனு கொடுத்தப்பக்கூட, எங்களுக்கு எதுவும் நடக்கலை. ஆனா இப்ப வனத்துறையினர் வந்து ஆய்வு பண்ணிட்டுப் போனாங்க. நாளைக்கு வந்து புடிச்சிடுறதா சொல்லியிருக்காங்க” என்றார்.  

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!