`கள்' இறக்க அனுமதியுங்கள்' - திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட விவசாயிகள்

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், தங்களின் தோட்டங்களில் நீரா பானம் உற்பத்தி செய்வதற்கான தென்னை மரங்களில் கட்டி வைத்திருந்த பானைகளைக் காவல்துறையினர் அத்துமீறி உடைத்த சம்பவம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மங்கலம், வேலாயுதம்பாளையம், காமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்களின் தோட்டங்களில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் நீரா பானம் உற்பத்தி செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 22-ம் தேதியன்று திடீரென அந்தத் தோட்டங்களில் சிலவற்றுக்குள் அதிரடியாகப் புகுந்த காவல்துறையினர், அங்கு தென்னை மரங்களில் நீரா பானம் உற்பத்தி செய்வதற்காகக் கட்டி வைக்கப்பட்டிருந்த பானைகளை உடைத்தெறிந்து வீசினர்.
இதனால், கொதிப்படைந்த விவசாயிகள், திருப்பூர் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு நியாயம் கேட்டனர். அதைத் தொடர்ந்து அரசு நிர்வாகம், காவல்துறை மற்றும் விவசாயிகளை வைத்து பேச்சுவார்த்தைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் நீரா பானம் இறக்குகிறோம் என்ற போர்வையில் விவசாயிகள் தோட்டத்தில் `கள்' இறக்குகிறார்கள் என்று போலீஸார் தரப்பில் புகார் கூறினார்கள். இதனால் பேச்சுவார்த்தைத் தோல்வியடைந்து அங்கேயே அரை நிர்வாணப் போராட்டத்தில் விவசாயிகள் இறங்கினார்கள். பின்னர், அவர்களைச் சமாதானப்படுத்திய அதிகாரிகள், இன்னும் ஒருவாரத்தில் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்கிறோம் என்றுகூறி விவசாயிகளை அனுப்பி வைத்தார்கள்.

இந்நிலையில் விவசாயிகளின் தோட்டத்தில் புகுந்து மீண்டும் காவல்துறையினர் அட்டூழியம் செய்வதாகக் கூறி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று (24-ம்தேதி) விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். அதில், "நாங்கள் தோட்டத்தில் 'கள்' இறக்குறோம் என்று கூறி, காவல்துறையினர் தொடர்ந்து எங்கள்மீது அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்கதையாகிவிடும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. 'கள்'ளைத் தடை செய்துவிட்டு, நீராவை மட்டும் இறக்கிவிட முடியாது. அப்படி நீராவை இறக்கினால், அதை 'கள்' என்று கூறி காவல்துறையினர் உள்ளே புகுந்து பானைகளை உடைக்கிறார்கள். எனவே 'கள்' இறக்க முதலில் தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நீராவை இறக்கிக்கொள்ள எந்தவித இடையூறுகளும் ஏற்படாமல் இருக்கும் என்று கூறி, ஆட்சியரக வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை 'கள்' இறக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விவசாயிகள் மத்தியில் எழுப்பப்பட்டு வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!