பிப்.21ல் கட்சி பெயர் அறிவிப்பு: அரசியல் பற்றி என்ன சொல்கிறார் கமல்?

நடிகர் கமல் - அரசியல் பிரவேசம்

"சிஸ்டம் சரியில்லை; அதை நாமெல்லாம் இணைந்து சரிப்படுத்தணும். அதற்கு நீங்கள் எல்லோரும் துணையா இருக்கணும்", "நான் ஏற்கெனவே அரசியலுக்கு வந்து விட்டேன். நற்பணி மன்றங்கள், அரசியல் கட்சியாகச் செயல்படும்" -இதுபோன்ற வாசகங்களை அண்மைக்காலமாக நாம் செய்தித்தாள்களில் படித்தும், ஊடகங்களில் கேட்டும் வருகிறோம்.

"நடிகர்கள் அரசியலுக்கு வருவது நல்லதா, கெட்டதா? நடிகர்களால் அரசியலில் சோபிக்க முடியுமா?" என்பன போன்ற கேள்விகளும் சமீபகாலமாக தமிழக மக்களிடையே தொடர்ந்து எழுந்தவண்ணம் உள்ளன.

தமிழ்த் திரையுலகில் 1980-களில் தொடங்கி, தொடர்ந்து நடிப்பில் கோலோச்சி வரும் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் பற்றிய செய்திகள் அன்றாடம் இடம்பெறும் செய்திகளாகி விட்டன. சென்னையில் கடந்த சில மாதங்களாக தன் ரசிகர்களைச் சந்தித்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவதை அதிகாரபூர்வமாக அறிவித்தார். தமிழகத்தில் எப்போது சட்டப்பேரவைத் தேர்தல் வந்தாலும், 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ள ரஜினி, இன்னமும் தன் கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை வெளியிடவில்லை. 

இந்தச் சூழ்நிலையில்தான், ரஜினியின் சமகால நடிகரான கமல்ஹாசனும் தன் அரசியல் பிரவேசத்தை அதிகாரபூர்வமாக அறிவித்ததுடன், மாவட்டவாரியாக தன் நற்பணி மன்றங்களைச் சேர்ந்த ரசிகர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 

பிப்ரவரி மாதம் 21-ம் தேதி தன் அரசியல் கட்சியின் பெயர் குறித்த அறிவிப்பை வெளியிட்டு, ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்திலிருந்து, முதல்கட்டமாகத் தமிழகத்தின்  தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போவதாகவும், அப்போது தமிழக மக்களைச் சந்திக்கவிருப்பதாகவும் கமல் அறிவித்துள்ளார். 
சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகர் கமல்ஹாசன் இரண்டு நாள்களாக ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் நற்பணி மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.  தென் மாவட்டங்களில் தான் மேற்கொள்ளவிருக்கும் சுற்றுப்பயணத்தின்போது என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது பற்றி அவர் அப்போது, நிர்வாகிகளுடன் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

"அரசியலுக்கு வந்தது ஏன்?" 

இதையடுத்து, சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன், "கட்சியின் பெயர் சின்னம் பற்றிய அறிவிப்பு பிப்ரவரி 21-ம் தேதி வெளியிடப்படும். ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்திலிருந்து சுற்றுப்பயணம் தொடங்கவுள்ளேன். நம் பயணம் கஜானாவை நோக்கியது அல்ல; வெற்றியை நோக்கிய பயணம். இந்தப் பயணம் மக்களுக்கானது என்பதை நாம் அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து ஆகியன தமிழ்நாட்டில் சரிவர இல்லை. அதைச் சரிசெய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன். இளைய இந்தியாவின் வழித்தடம் டிஜிட்டல் இந்தியா. கிராமப்புறங்களுக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பம் செல்ல வேண்டும். என் ஆயுளுக்குள் இந்தியாவைப் பெருமைப்படும் அளவுக்கு மாற்றுவேன். முதல்கட்டமாக, ராமநாதபுரம், மதுரை, நெல்லை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறேன். தொடர்ந்து, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன்" என்றார்.

தனது பயணத்தின்போதும், மக்கள் சந்திப்பின்போதும் போக்குவரத்துக்கு இடையூறு வராதபடியும், பொதுமக்களுக்குத் தொல்லை தராதபடியும் நடந்துகொள்ள வேண்டும் என ரசிகர்களிடம் கமல் கேட்டுக் கொண்டதாக நற்பணிமன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர். 

இந்த நிலையில், பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது குறித்து நடிகர் கமல்ஹாசன் தன் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். 

"ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் பஸ் கட்டண உயர்வைத் தடுக்க ஆவனம் செய்திருக்கும். முடிவெடுத்துவிட்டு கருத்துக் கேட்பது அரசியல் சாதுர்யம். முன்பே கேட்டிருந்தால் நல்ல நிவாரணம் சொல்லும் வல்லுநர்கள் அரசுப் பணியிலேயே உள்ளனர். அரசாள்பவர் கேட்டால்தானே!" என்று கமல் அதில் கூறியுள்ளார்.

நடிகர் கமல் பேட்டி

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2016 டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். அவர் தலைமையில் செயல்பட்டு வந்த அ.தி.மு.க., தற்போது இரண்டு அணிகளாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. வயோதிகம் காரணமாக தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, தன் கோபாலபுரம் வீட்டிலேயே முடங்கியுள்ளார். அக்கட்சியை தற்போது அதன் செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் உடல்நலக்குறைவால் அரசியலில் முழு அளவில் செயல்பட முடியாமல் உள்ளார்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் அரசியல் பிரவேசம், தமிழக அரசியலில் ஆரோக்கியமான முன்னேற்றத்தையும், மக்களுக்கான திட்டங்களையும் கொண்டுவர உதவினால் உண்மையிலேயே வரவேற்கத்தக்கதுதான்.

தமிழக அரசியலில் தற்போது தலைவர்களுக்குப் பஞ்சமாகி விட்டது என்பதாலோ, என்னவோ அண்மைக்காலமாக நடிகர்கள் அரசியலில் நுழைவது அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. ரஜினி, கமலைத் தொடர்ந்து விஷால், விஜய், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் தங்களின் அரசியல் பிரவேசத்தை அறிவிக்க, இப்போதே வரிசைக் கட்டிக் கொண்டு நிற்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. நடிகர்கள் உள்பட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அது அவரவர் உரிமை... ஏற்கெனவே, திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் பற்றிய வரலாறுகளையும் சம்பந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்தல் நலம்.

புதியவர்களின் அரசியல் வருகை மற்றும் அவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்திருந்து பார்ப்போம்...!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!