தடுத்து நிறுத்திய டிராஃபிக் போலீஸ்... தீவைத்துக்கொண்ட கார் டிரைவர்... பதறவைத்த ஓ.எம்.ஆர் சாலை

சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் போக்குவரத்துப் போலீஸார் தாக்கியதாக மணிகண்டன் என்ற கார் ஓட்டுநர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பழைய மாமல்லபுரம் சாலையில் தனியார் நட்சத்திர விடுதி அருகே வேளச்சேரிக்குத் திரும்பும் இடத்தில் வழக்கமாக டிராஃபிக் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில், இன்று வாகன சோதனையில் போக்குவரத்துப் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தவழியே வந்த வாடகைக் கார் ஒன்றை போலீஸார் தடுத்து நிறுத்தியதாகத் தெரிகிறது. அந்தக் காரை ஓட்டி வந்த மணிகண்டன் என்ற ஓட்டுநர் சீட்பெல்ட் அணியவில்லை என்று கூறப்படுகிறது. 

இதுகுறித்து போக்குவரத்துக் காவல் துணை ஆய்வாளர் தாமரைச் செல்வன் உள்ளிட்ட போலீஸார் விசாரித்தபோது, இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், மணிகண்டனைப் போலீஸார் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, காரில் இருந்த பெட்ரோலை எடுத்து தன் மேல் ஊற்றிக்கொண்ட மணிகண்டன், திடீரென தீவைத்துக் கொண்டார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீஸார் மற்றும் அப்பகுதி மக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீது ஏற்கெனவே ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், தீக்குளிப்பு சம்பவத்தைக் கண்டித்து பழைய மாமல்லபுரம் சாலையில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!