ஊழல் கட்சியான அ.தி.மு.க பின்னால் எங்களால் இருக்க முடியாது! - தமிழிசை

பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டி பா.ஜ.க. தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழிசை செளந்தரராஜன், ''பேருந்துக் கட்டண உயர்வால் ஏழை மக்கள், மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே விரிசல் என்று ஊடகங்கள் கூறுகின்றன. நாங்கள் எப்போது சேர்ந்திருந்தோம். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒட்டிய போஸ்டரைக் காவல்துறையினர் கிழிக்கிறார்கள். இந்த ஆட்சியில் என்ன செய்து கிழித்தார்கள் என்பதற்கு போஸ்டரைக் கிழித்ததுதான் சாட்சி. ஏழு வருஷங்களாகக் கட்டணத்தை ஏற்றாமல் ஒரேயடியாக ஏற்றி மக்கள் முதுகில் சுமை ஏற்றியுள்ளார்கள். அதற்கு காரணம் இரண்டு கட்சிகளும்தான். பணியாற்றுபவர்கள் மட்டுமே தொழிற்சங்கத்தில் இருக்க வேண்டும் என எம்.ஜி.ஆர் அப்போது கூறினார். அதைக் கருணாநிதி மாற்றினார். 

ஊழல்

கம்யூனிஸ்ட், தி.மு.க தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையின்போது கட்டணத்தை ஏற்றிக்கொள்ளுங்கள் எங்களுக்குச் சம்பளத்தை ஏற்றுங்கள் என்று கூறியுள்ளார்கள். அவர்கள் இப்போது போராட்டம்  நடத்த அருகதை இல்லை. தமிழகத்துக்கு மட்டும் தனி கட்டணம் விதிக்கிறது பாண்டிச்சேரி அரசு. அதை எதிர்த்து தி.மு.க, காங்கிரஸ் போராட்டம் நடத்துமா. இதெல்லாம் மாற வேண்டுமென்றால் பா.ஜ.க-வில்தான் முடியும். புதிய பறவைகளால் அதிக தூரம் பறக்க முடியாது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால், உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வரவுள்ளதாகக் கூறியுள்ளார். அதை நாங்கள் தடுப்போம். ஒருவர், கஜானாவை நோக்கிப் போகவில்லை என்கிறார். தமிழகத்தில் கஜானாவை காலி செய்து வைத்துள்ளார்கள். எந்தப் பிரச்னைக்கும் குரல் கொடுக்காமல் 30 வருஷங்கள் நடித்து தங்கள் கஜானாவை நிரப்பிவிட்டு அரசியலுக்கு வருகிறார்கள். அ.தி.மு.க ஆட்சிக்குப் பின்னாலெல்லாம் நாங்கள் இருக்க முடியாது.

எங்கு பார்த்தாலும் ஊழல். போக்குவரத்துத்துறையை மேம்படுத்த என்ன செய்தார்கள். நீதிமன்ற விசாரணையிலிருந்து தப்பிக்க சிறையில் சசிகலா மௌன விரதம் இருக்கிறார். அவர் எத்தனை விரதம் இருந்தாலும் பாவத்தைத் துடைக்க முடியாது. இந்தியாவில் 65 சதவிகிதம் காவி மயமாகிவிட்டது. அதனால் தமிழகத்தையும் காவிமயமாக்குவோம். பேருந்தில் சென்ற மக்கள் மத்திய அரசின் ரயிலை தேடிச் செல்கிறார்கள். எங்களால்தான் நல்ல ஆட்சியைத் தர முடியும்'' என்றார். மாநிலத் தலைவர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் 200- க்கும் குறைவானவர்களே கலந்துகொண்டனர். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!