விலையோ இரண்டாயிரம்; விற்பனையோ சில மணி நேரம்! மல்லிகைக்காகப் போட்டிபோடும் வியாபாரிகள்

மல்லிகை

பூக்களில் மல்லிகைக்குத் தனி இடமுண்டு. பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் பிடித்தமான மலர் மல்லிகை. திருமணங்கள், திருவிழாக்களில் மல்லிகை நிச்சயம் இடம்பெறும். தமிழகம் முழுவதும் மல்லிகை பரவலாகப் பயிரிடப்பட்டாலும், மதுரை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விலையும் மல்லிகைக்கு மவுசு அதிகம். மதுரை மல்லி என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த மல்லிகை, பல நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. திண்டுக்கல் அருகேயுள்ள நிலக்கோட்டை பகுதியில் அதிகளவு மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. ஒருமுறை சாகுபடி செய்தால் ஆண்டுக்கணக்கில் பூக்கள் கிடைக்கும் என்பதால், பூக்கள் சாகுபடி செய்யும் தோட்டங்களில் மல்லிகையும் தவறாமல் சாகுபடி செய்வார்கள்.

இந்நிலையில், கடுமையான பனிப்பொழிவு காரணமாக சந்தைகளில் மல்லிகை வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. வழக்கமாக இந்த சீசனில் சந்தைக்கு வரும் மல்லிகையில் பாதி அளவுக்குக்கூட தற்போது வரத்து இல்லை. இதனால் மல்லிகை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதுவரை அதிகபட்சமாக இரண்டாயிரம் வரைக்கும் விற்பனையான மல்லிகை, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகபட்சமாக ஆறாயிரம் ரூபாய் வரை விற்பனையாகி இருக்கிறது. ஞாயிறு, திங்கள் இரண்டு நாள்களும் முகூர்த்த நாள்கள் என்பதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டது. இந்நிலையில் நாளை வாஸ்து நாள் என்பதால் இன்று கிலோ இரண்டாயிரம் ரூபாய் வரை திண்டுக்கல் பூமார்க்கெட்டில் விற்பனையாகி உள்ளது. வரத்து குறைவு காரணமாக மல்லிகை வாங்க வியாபாரிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. சந்தைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே அத்தனை மல்லிகையும் விற்பனையாகி விட்டன. ''இன்னும் சில நாள்கள் வரை மல்லிகையின் விலை உச்சத்தில்தான் இருக்கும்'' என்கிறார்கள் வியாபாரிகள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!