``என் கல்யாணத்தை நிறுத்துங்க!'' - கலெக்டருக்குப் போன் செய்த சிறுமிக்கு விருது

னக்கு நடக்கவிருந்த  திருமணம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் போனில் தெரிவித்து, தடுத்து நிறுத்திய திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி  நந்தினிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. 

மாணவி நந்தினிக்கு படித்து அரசு அதிகாரியாக உருவாக வேண்டுமென்பது கனவு. மாணவியின் விருப்பத்தைச் சட்டைசெய்யாத பெற்றோர்... `நீ படித்தது போதும்' என்று அவரிடம் கூறி திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர். அப்போது, நந்தினி 10-ம் வகுப்புதான் படித்து வந்தார். குழந்தைத் திருமணத்துக்கு பெற்றோர் ஏற்பாடும் செய்துகொண்டிருந்தனர். அதிர்ச்சியும் கவலையும் அடைந்த நந்தினி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, தனக்கு கல்யாணம் நடக்கவிருப்பது குறித்து தகவல் அளித்தார். மாவட்ட ஆட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கையால் நந்தினியின் திருமணம் நிறுத்தப்பட்டது.

நந்தினியின் துணிச்சலான சமயோசிதமான செயலைப் பாராட்டிய திருவண்ணாமலை ஆட்சியர் பெண் குழந்தை மேம்பாட்டு விருதுக்கு பரிந்துரைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (24.1.2018) நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  நந்தினிக்கு விருதுடன் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையையும் வழங்கி கௌரவித்தார்.

 விருதுபெற்ற பின் நந்தினி கூறுகையில், ''என்னைப் போன்று ஏராளமான சிறுமிகள் இளவயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டு வேதனைகளைத் துயரங்களைச் சந்திக்கின்றனர். பால்ய விவாகத்தை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்படும் சிறுமிகள் புகார் அளிக்க முன் வர வேண்டும். அப்போதுதான், சமூகத்தில் பால்ய விவாகங்கள் ஒழியும். இப்போது. நான் 10-ம்வகுப்பு படித்து வருகிறேன். வருங்காலத்தில், சமூகத்துக்கு முன்மாதிரியாகத் திகழ்வேன்'' என்றார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிகாரிகள் நந்தினியின் துணிச்சலான செயலை மனதாரப் பாராட்டினர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!