வாக்களிக்கும் முறையை மாற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

சந்திரசேகரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தகுதியற்ற நபர்கள் தேர்வு செய்யப்படுவதால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. எனவே, தேர்தலின்போது வேட்புமனு தாக்கல் செய்பவர்களில் 10 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும். பிறருக்கு அவர்கள் டெபாசிட் செய்த பணத்தை திருப்பி வழங்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களை ஊடகங்கள் மூலமாக அறிமுகம் செய்ய வேண்டும். வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இதனால் ஓட்டுக்குப் பணம், அன்பளிப்புகள் வழங்குவது தடுக்க வாய்ப்பாக அமையும்.

அரசே ஏற்பாடு செய்து வேட்பாளர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டி, அங்கே அவர்களது பிரசாரத்தை முன்வைக்க வேண்டும். இவற்றை முன்னிறுத்தி, உரிய நடவடிக்கை கோரி தொடர்புடைய அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் கடந்த டிசம்பர் 15-ல் மனு அனுப்பியும் உரிய நடவடிக்கை இல்லை. இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வாக்கு சேகரிக்கும் மற்றும் வாக்களிக்கும் முறையில் மாற்றம் கொண்டுவந்தால் தகுதியான நபர்களை தேர்வு செய்யவும், நாட்டின் வளர்ச்சிக்கும் உதவியாக அமையும். ஆகவே, வாக்களிப்பதை கட்டாயமாக்கவும், மத்திய சட்ட மற்றும் நீதி அமைச்சகச் செயலரும், இந்திய சட்ட ஆணையத் தலைவரும் வாக்களிக்கும் முறையை மாற்றுவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும், அதனடிப்படையில் மாற்றம் கொணர்வது குறித்து குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவெடுக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!