`ஒழுங்காப் படிங்கப்பா' - மாணவர்களிடம் மண்டியிட்டு நெகிழவைத்த தலைமையாசிரியர்

விழுப்புரம் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவனிடம் மண்டியிட்டு ``ஒழுங்கா படி” என்று கெஞ்சிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விழுப்புரம்

இன்று (24.01.2018) காலை வாட்ஸ்-அப் குழுக்களில் பள்ளி மாணவன் முன்பு ஆசிரியர் ஒருவர் மண்டியிட்டு கும்பிடும் புகைப்படம் ஒன்று வைரலாகப் பரவியது. புகைப்படத்தின் கீழே அந்த ஆசிரியர்தான் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் என்றும் பள்ளியின் பெயரும் குறிப்பிட்டிருந்ததால் உடனே அங்கு ஆஜரானோம். விழுப்புரத்தில் உள்ள அந்தப் பள்ளியின் பெயர் காமராஜர் நகராட்சி உயர் நிலைப்பள்ளி. நாம் அங்கு சென்றபோது பள்ளி முதல்வரான பாலு, மாவட்டக் கல்வி அலுவலகத்துக்குச் சென்றுவிட்டதாகத் தெரிவித்த சக ஆசிரியர்களிடம் பேசினோம். “இது எங்கள் பள்ளியில் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான் சார். அவர் தலைமையாசிரியாக வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன.

விழுப்புரம்

ஆனால், தலைமையாசிரியர் என்ற பந்தா கொஞ்சம்கூட அவரிடம் இருக்காது. மிகவும் எளிமையாகப் பழகும் குணமுடைய அவர். இங்கு பணிபுரியும் ஆசிரியர்களிடம் மட்டுமல்ல மாணவர்களிடமும் கடுமையாக நடந்துகொள்ளாமல் அன்பாகப் பழகுவார். சரியாகப் படிக்காத மாணவர்களை அழைத்து ‘தயவு செய்து ஒழுங்காப் படிங்கப்பா, ஒழுக்கமா இருங்க, படித்தால்தான் உங்கள் எதிர்காலம் சிறப்பா இருக்கும்’ என்று கையெடுத்துக் கும்பிடுவார். அன்றாடம் நடக்கும் பிரேயர் கூட்டத்தின்போதும் மாணவர்களுக்கு படிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றியே பேசுவார். இந்தப் பள்ளியில் மொத்தம் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். அதில் 80% மாணவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அனைத்து மாணவர்களுக்குமே மிகுந்த முக்கியத்துவம் அளித்து சொல்லிக்கொடுப்போம்.

அப்படி இருந்தும், ஒரு சில மாணவர்கள் வீட்டில் பள்ளிக்குச் செல்கிறேன் என்று கூறிவிட்டு  பள்ளிக்கு வர மாட்டார்கள். தேர்வுகள் நடக்கும் அன்றும் பள்ளியை `கட்’ அடித்துவிடுவார்கள். அந்த மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைத் தலைமையாசிரியர் பாலு சாரிடம் கொடுப்போம். அவர் அந்த மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் படிப்பின் அவசியத்தை எடுத்துக் கூறி பள்ளிக்கு வருமாறு செய்துவிடுவார். முழு ஆண்டுத் தேர்வு நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பதால், கடந்த 15 நாள்களாகப் பள்ளிக்கு வராத மாணவர்களை வீடு தேடிச் சென்று அவர்களை அழைத்து வந்துகொண்டிருக்கிறார். இவர் இந்தப் பள்ளிக்கு தலைமையாசிரியராக வந்தது எங்களுக்கும் மாணவர்களுக்கும் வரப்பிரசாதம்” என்று நெகிழ்ந்தனர்.

தலைமையாசிரியர் பாலு பல்வேறு சமூகப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் பேராசிரியர் பிரபா கல்விமணியின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர் நலன் சார்ந்த பல்வேறு பணிகளைச் சத்தமின்றி பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார். “மாணவர்களைக் கண்டிக்கக் கூடாது, அவர்களை அடிக்கக் கூடாது. ஆனால், அவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைத்துவிட வேண்டும்” என்று அரசு உத்தரவிட்டால் ஆசிரியர்கள் வேறு என்ன செய்ய முடியும். அந்த வகையில் இந்த ஆசிரியரின் முயற்சி கண்டிப்பாகப் பாராட்டத்தக்கதுதான்” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!