"ஆண்டாள் பெண் அல்ல பெரியாழ்வாரின் கற்பனையே எனக் கூறிய ராஜாஜியை எதிர்க்கவில்லையே ஏன்?" – கி.வீரமணி கேள்வி

ஆண்டாள் சர்ச்சை குறித்து கி.வீரமணி

வைரமுத்துவை எதிர்ப்பவர்கள், ‘ஆண்டாள் என்பவர் பெரியாழ்வாரின் படைப்பே’ எனக் கூறிய ராஜாஜியை எதிர்க்கவில்லையே... ஏன்’’ என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் தேவி டாக்கீஸ் அருகில் ஸ்ரீரங்கம் தந்தை பெரியார் படிப்பகத்தின் 5 -ம் ஆண்டு விழா மற்றும் பொங்கல் விழா, அக்னி ஹோக்தரம் தாத்தாச்சாரியாரின் படம் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ‘நக்கீரன்’ ஆசிரியர் கோபால் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில், ‘இந்து மதம் எங்கே போகிறது’ எனும் தொடரை எழுதிய அக்னி ஹோக்தரம் தாத்தாச்சாரியாரின் படம் திறந்துவைக்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில்,  ‘நக்கீரன்’ ஆசிரியர் கோபாலுக்குப் பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டது.

கடந்த 8-ம் தேதியே இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கோரப்பட்டது. ஆனால் நிகழ்ச்சியை நடத்திட திருச்சி மாநகரக் காவல் துறை அனுமதி மறுக்கவே, திராவிடர் கழகம் சார்பில் மதுரை உயர் நீதிமன்றத்தில் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி வாங்கப்பட்டது. இந்நிலையில் ஆண்டாள் சர்ச்சை கிளம்பவே, ஶ்ரீரங்கத்தில் நடந்த இந்த விழாவுக்குப் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் இந்தக் கூட்டத்தில், “இந்துக்களை இழிவாகப் பேசினால் முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்” என இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் அறிக்கைகள் வெளியிட, அது வைரலாகின. இதனால் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வீரமணி மேடைக்கு அழைத்து வரப்பட்டார். மேலும், போலீஸ் பாதுகாப்பு கூடுதலாகப் போடப்பட்டிருந்தது.

 

கி.வீரமணி

நிகழ்ச்சியில் பேசிய வீரமணி,''  திராவிடர் கழகம் தனிப்பட்ட நபர்களை ஒருபோதும் வெறுத்ததாக வரலாறு இல்லை. பிறப்பின் அடிப்படையில் பேதம் காண விரும்பும் தத்துவவாதிகளைத்தான் திராவிடர் கழகம் தத்வார்த்தரீதியாக எதிர்க்கிறது. நாங்களாக வம்பு இழுப்பது இல்லை. வந்த வம்பை எளிதில் விட்டுவிட மாட்டோம்.

பகுத்தறிவு வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும் நாக்கை வெட்டுவோம்; தலையை வெட்டுவோம் எனக் கூறினால், அதற்கு பெயர் காட்டுமிராண்டிகள் என மக்கள் கருதுவார்கள் என்கிற நிலைதான் இருக்கிறது. எந்தக் கருத்தையும் எதிர்க்கருத்துக்களால் எதிர்கொள்ள வேண்டும். அதன்மூலம் மக்களை நாகரிகப்படுத்த வேண்டும். வரலாறு தெரியாத சிலர், ‘எங்களை நோக்கி இந்துமதத்தை மட்டும்தான் பேசுவீர்களா’ எனக் கேட்கிறார்கள். கிறிஸ்தவ மதம் தொடர்பாகக் கடந்த 1936-லேயே நூல் எழுதியவர் பெரியார். மூடநம்பிக்கைகளை எதிர்ப்பதுதான் எங்களின் நோக்கம். எந்த மதமும் பாகுபாடு இல்லை; எல்லா மதமும் ஒன்றுதான். கடவுள் இல்லை என்பதே திராவிடர் கொள்கை. 

ஆண்டாள் குறித்த சர்ச்சையில் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று வைரமுத்து சொன்னபிறகு, அவரை மன்னிப்பதுதான் மனித இயல்பு. ஆனால் அதன்பிறகும் அவருக்கு எதிராகப் போராடுவது நாகரிகம் அல்ல; மனித நேயமும் அல்ல. அதேபோல் வைரமுத்து ஆய்வுக் கருத்தைப் பேசியதற்காகக் கொதிக்கிறார்களே, ‘ஆண்டாள் உண்மையில் வாழ்ந்த பெண் அல்ல... பெரியாழ்வாரின் படைப்பே’ என ராஜாஜி அப்போதே கட்டுரை எழுதியிருக்கிறார். வைரமுத்துமீது கோபம் கொள்கிறவர்கள் ராஜாஜி மீது கோபம் கொள்ளவில்லையே ஏன்? இப்போது நடைபெறும் நிகழ்வுகள் ஆண்டாளுக்கானது அல்ல... இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்துத்துவ உணர்வைத் தமிழகத்தில் பரப்ப முயற்சி செய்கிறார்கள். அதில் அவர்கள் நிச்சயம் தோற்றுப்போவார்கள்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!