'ஆளத் தகுதியில்லாத அரசு இது'- ஆர்ப்பாட்டத்தில் பொங்கிய பா.ஜ.கவினர்!

தமிழக அரசின் மக்கள் விரோதப் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் மயிலாடுதுறையில் இன்று (24-ம்தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்துநிலையம் அருகே, நாகை வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில், நகரத் தலைவர் மோடி கண்ணன் முன்னிலையில், மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் தமிழக அரசின் பேருந்துக் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனர்.  

இதில் பேசிய பாராளுமன்ற தொகுதிப் பொறுப்பாளர் அகோரம், ''தனியார் பேருந்துகளெல்லாம் நல்ல லாபம் ஈட்டுறாங்க. வருடா வருடம் புதுப் பேருந்து மாத்துறாங்க. சொகுசு இருக்கையில பயணிச்சிக்கிட்டு பாட்டும் கேட்கலாம், படமும் பார்க்கலாம். அதே நேரத்துல அரசுப் பேருந்துகள் ஓட்டையும், உடைசலுமாய், பழைய இரும்புக்குப் போட்டாகூட பேரிச்சம்பழம்கூட கொடுக்க மாட்டான். அந்த லட்சணத்துல பேருந்துகளை வெச்சிக்கிட்டு ஒரேயடியா கட்டணத்தை உயர்த்தி ஏழை மக்களை வதைக்கிறாங்க.  அரசுப் பேருந்துகள் நஷ்டத்துல இயங்குறதா சொல்றது மக்களை ஏமாத்துற வேலை. தனியார் பேருந்துகளெல்லாம் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்களின் பினாமிகள் பெயரில்தான் ஓடுது. அவர்கள் லாபம் சம்பாதிக்க அரசுப் பேருந்துகளை வேண்டுமென்றே பயணிகள் இல்லாத நேரத்தில் விடுவார்கள். அதற்கும் லஞ்சம். டயர் முதல் உதிரிப் பாகங்கள் அனைத்துமே டூப்ளிகேட்தான். அந்த வகையில் வரும் கமிஷன் பணம் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் கப்பமாக போய்விடுகிறது.

மூன்று மாதம் ஓடுகிற டயரை வாங்காம, ஒரு மாசத்துலேயே தேஞ்சி தூக்கிப்போடுற டயரத்தான் வாங்குவாங்க. ஆனா கணக்கு காட்டுறது என்னமோ அந்த மூணு மாச டயரை வாங்குன மாதிரி. இதுபோல் நடைபெறுகிற கொள்ளையை நிறுத்தினாலே அரசு பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்த தேவையிருக்காது. தமிழ்நாட்டோட தலையெழுத்து இதுவாகத்தான் இருக்கு. ஆளுகிற கட்சிக்கு எதிர்க்கட்சின்னு ஒன்று இருக்கு. அதை சொரிஞ்சி விடுறதுக்கு நிறைய கட்சிகளும் இருக்கு. பா.ஜ.க. எப்போதுமே தவறுக்குத் துணைபோகாது. தனித்தேதான் நிற்கும். வாழத் தகுதியில்லாமல் மக்களை மாற்றுகின்ற ஆளத் தகுதியில்லா அரசு இது. இந்த அரசின் பேருந்துக் கட்டண உயர்வை பா.ஜ.க. சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற்று ஏழைகள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்'' என்று முடித்தார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!