எல்லைதாண்டும் இந்தியப் படகுகளுக்குக் கூடுதல் அபராதம் விதிப்பு! இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய சட்டமசோதா நிறைவேற்றம்

எல்லைதாண்டியதாகக் கூறி பறிமுதல் செய்யப்படும் தமிழக மீனவர்கள் படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது மற்றும் படகின் அளவுக்கு ஏற்றவாறு அபராதம் விதிப்பது  தொடர்பான புதிய சட்டம் இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை அமைச்சர் மஹிந்த அமரவீர

இலங்கைக் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் படகுகள் மற்றும் மீனவர்கள் தொடர்பாக ஏற்கெனவே இருந்துவந்த சட்டத்தில் மாற்றம் செய்து, புதிய சட்டத் திருத்தத்தை இலங்கை நாடாளுமன்றத்தில் மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தாக்கல்செய்தார். விவாதங்கள் ஏதுமின்றி ஒருமனதாக இந்த சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. 

இந்தப் புதிய சட்டத் திருத்தத்தின்படி இதுவரை விதிக்கப்பட்டுவந்த அபராதத்தைவிட கூடுதலாக விதிக்கப்படும். மேலும், பறிமுதல் செய்யப்படும் படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். எல்லை தாண்டும் படகுகளின் அளவினைப் பொறுத்து 15 மீட்டருக்குக் குறைந்த நீளத்தைக் கொண்ட படகுக்கு 5 மில்லியன் ரூபாயும், 15 – 24 மீட்டருக்கும் இடைப்பட்ட படகுக்கு 20 மில்லியன் ரூபாயும், 24 முதல் 45 மீட்டர் நீளம் கொண்ட படகுக்கு 100 மில்லியன் ரூபாயும், 45-75 மீட்டருக்கு இடைப்பட்ட படகுக்கு 150 மில்லியன் ரூபாயும், 75 மீட்டருக்கு மேற்பட்ட மீன்பிடி படகுக்கு 175 மில்லியன் ரூபாய் வரையில் அபராதம் விதிக்க இந்தச் சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. 

இதுதவிர, தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்ட உடனே இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் அல்லது துணைத் தூதர் அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் மீன்வளத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வர வேண்டும் எனவும் அந்தச் சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 187 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாத நிலையில், இன்று இலங்கை அரசு நிறைவேற்றியுள்ள புதிய சட்டத்தினால் பாக் நீரிணைப் பகுதியில் பாரம்பர்யமாக மீன்பிடித்துவரும் தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!