நிலவுக்கு ரோபோக்களை அனுப்பும் நாள் வெகுதொலைவில் இல்லை! - இஸ்ரோ விஞ்ஞானி நம்பிக்கை

நிலாவுக்கு வரும் மே மாதத்தில் ரோபோ என்னும் எந்திரத்தை அனுப்பத் திட்டமிடப்பட்டிருப்பதாக இஸ்ரோவின் அங்கமான திரவ இயக்க திட்ட மையத்தின் துணை இயக்குநர் மணிமாறன் தெரிவித்தார்.

மணிமாறன் - ரோபோ அனுப்ப திட்டம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் அங்கமாக கேரள மாநிலம் வலியமலா பகுதியில் செயல்பட்டு வரக்கூடிய திரவ இயக்க திட்ட மையத்தின் 30-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் மாணவர்களுக்கான தென் மண்டல அளவிலான பேச்சுப் போட்டி, வினாடி வினா ஆகியவை நடைபெற்றன. இதில் 350-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். அதன் ஒருபகுதியாக நடந்த அறிவியல் கண்காட்சியையும் மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திரவ இயக்க திட்ட மையத்தின் துணை இயக்குநரான மணிமாறன் பரிசுகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், ``இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் வெற்றிப் பாதையில் திரவ இயக்க திட்ட மையத்துக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. எங்கள் மையத்தில் 1,200 பேர் பணியாற்றுகிறோம். திரவ இயக்கத் திட்ட மையத்தில் பல்வேறு சோதனைகள் நடத்தியதன் மூலமாக பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளில் நமது நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது.

இதுதவிர, மங்கள்யான், சந்திராயன் திட்டங்களிலும் எங்களுடைய இன்ஜினே பயன்படுகிறது என்கிற பெருமை இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட்டில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட சி-20 இன்ஜின் பயன்படுத்தப்பட்டது. தற்போது நமது ராக்கெட்டுகளில் 4 டன் எடை கொண்ட செயற்கைக் கோள்கள் மட்டுமே செலுத்தப்படுகிறது. அதனை 10 டன் அளவாக உயர்த்துவதுகுறித்து சோதனை செய்து வருகிறோம். வெளிநாடுகளின் உதவியுடன் செயற்கைக் கோள்களை அனுப்பினால் ஒரு கிலோ எடையை விண்ணில் செலுத்துவதற்கு 20,000 அமெரிக்க டாலர்கள் செலவு பிடிக்கும். ஆனால், நாமே சொந்தமாக 10 டன் எடை கொண்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த உள்ளோம். 

மாணவர்கள்

இதுவரையிலும் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை 42 முறை விண்ணில் செலுத்தியிருக்கிறோம். வரும் மே மாதத்தில் சந்திராயன் -2 விண்கலத்தை விண்ணில் செலுத்த உள்ளோம். நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங் இறங்கியது போல் மனிதனுக்குப் பதிலாக எந்திரத்தை தரையிறக்கத் திட்டமிட்டுள்ளோம். அத்துடன், ரோவர் என்கிற ரோபோவையும் நிலவில் தரையிறக்க ஆய்வுகள் மேற்கொள்ள இருக்கிறோம். விண்வெளிக்கு மனிதனை அனுப்பவும் பரிசீலித்து வருகிறோம். விண்வெளியில் 200 கி.மீ தூரத்தில் ஸ்பேஸ் ஸ்டேஷன் அமைத்து அங்கு மனிதர்களை அனுப்பும் திட்டமும் பரிசீலனையில் இருக்கிறது’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!