தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பதா? - காஞ்சி மடாதிபதிக்குப் புலவர்கள், எழுத்தாளர்கள் கண்டனம் | tamil writers pandits condemned junior seer of Kanchi mutt

வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (25/01/2018)

கடைசி தொடர்பு:08:18 (25/01/2018)

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பதா? - காஞ்சி மடாதிபதிக்குப் புலவர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்

Vijayender

மரபுப்படியும் தமிழ்நாட்டு அரசின் விதிப்படியும் பொது நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும்போது எழுந்து நிற்க வேண்டும் என்பதை, காஞ்சிபுரம் இளைய மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி அவமதித்துவிட்டார்; இதற்காக அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தமிழ்ப் புலவர்களும் எழுத்தாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  

இதுகுறித்து த.மு.எ.க.ச. மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் சு. வெங்கடேசன் ஆகியோர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ``சென்னையில் ஜனவரி 23-ம் தேதி நடைபெற்ற சமஸ்கிருத அகராதி வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர், நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது எழுந்து நிற்காமல் அமர்ந்தவாறே இருந்திருக்கிறார். மேடையிலும் அரங்கத்திலும் இருந்த எல்லோரும் எழுந்து நின்றபோதிலும், அவர் மட்டும் அமர்ந்தே இருந்திருக்கிறார். இதுசெய்தியாக வெளிவந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ள பின்னணியில், சங்கர மடத்திலிருந்து ஒரு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சங்கராச்சாரிகள் எழுந்து நிற்பது மரபல்ல என்று அதில் கூறப்பட்டுள்ளது. தமிழை அவமதிப்பதை ஒரு மரபாகவே கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இதை விடச் சான்று தேவையில்லை” என்று குறிப்பிட்டுள்ளனர். 

மேலும், ``கடவுள் வாழ்த்து பாடப்படுகிறபோது அமர்ந்த நிலையில் தியானம் செய்வது வழக்கம், அப்படித்தான் தமிழ்த்தாய் வாழ்த்தின்போதும் நடந்திருக்கிறது என்றும் மடத்தின் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. வருத்தம் தெரிவிக்கவோ இனி அவ்வாறு நடக்காது என்று கூறவோ முன்வருவதற்கு மாறாக, தவறுக்குப் புனித முலாம் பூசி நழுவுகிற உத்தியாகத்தான் இந்தச் செயற்கையான விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை எவரும் புரிந்துகொள்ளலாம். 

சமஸ்கிருதம்தான் தேவமொழி, தமிழ் நீச மொழி என்ற, தமிழைத் தாழ்வாகக் கருதுகிற கோட்பாட்டின் அடிப்படையிலேயே அவர் பொது மேடையில் இவ்வாறு நடந்துகொண்டிருக்கிறார் என்பது வெளிப்படை. கடவுள் வாழ்த்துக்கு இணையாக தமிழ்த்தாய் வாழ்த்தைக் கருதியது உண்மையானால், ஆலயங்களில் தமிழே இனி முதன்மையான வழிபாட்டு மொழியாக இருக்கும் என்று மடத்தின் சார்பில் அறிவிக்கப்படுமா?. விஜயேந்திரர் செயலை நியாயப்படுத்துகிறவர்கள் இதை வலியுறுத்துவார்களா?.

தமிழ் உணர்வாளர்கள் ஒருமித்த குரலில் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தனது ஆணவச் செயலுக்காக அவர் வெளிப்படையாக மன்னிப்புக் கோர வேண்டும் என்று த.மு.எ.க.ச. வலியுறுத்துகிறது. இனியும் மதபீட அதிகாரத்தின் பெயரால் இத்தகைய அவமதிப்புகள் நடவாது என்பதை மொழிகளின் சமத்துவத்தை மதித்திடும் அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இத்துடன், சிலம்பொலி செல்லப்பன் தலைமையிலான தமிழகப் புலவர் குழு, விஜயேந்திரருக்குத் தங்கள் கண்டனத்தை அனுப்பியுள்ளது. அதில்,” அண்மையில் நிகழ்ச்சியில் தேசிய கீதம் பாடும்போது எழுந்துநின்று அதற்கு மதிப்பு கொடுத்துள்ளதைப் போன்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போதும் தாங்கள் எழுந்து நின்றிருக்க வேண்டும். அங்ஙணம் மதிப்பளிக்காமல் விட்டதுடன் அதற்கு சாக்குப்போக்குகள் கூறுவது கண்டிக்கத்தக்கது. உலகெங்கும் வாழும் 10 கோடி தமிழர்களும் போற்றி மதிக்கும் தமிழ்த்தாயைத் தாங்கள் மதிக்காமல் தமிழர் உள்ளத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளீர்கள். தாங்கள் செய்த பிழைக்கு மனம்வருந்தி உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களால் உருவாக்கப்பட்டு, பாவேந்தர் பாரதிதாசன், தேவநேயப் பாவாணர், தமிழ்ப் போராளி சி.இலக்குவனார், அறிஞர் மு.வ. போன்ற தமிழ்ச் சான்றோர்களைக் கொண்டு இயங்கிய வரலாறு கொண்ட தமிழகப் புலவர் குழு, தங்களின் தமிழ்ப் பகையுணர்வை வன்மையாகக் கண்டிக்கிறது. உலகத் தமிழர்களின் உள்ளம் உலுக்கிய இந்தப் பெரும்பிழைக்கு தாங்கள் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கும் தமிழர்களின் கடும் போராட்டத்தைத் தாங்கள் சந்திக்கவேண்டிருக்கும் என்று எச்சரிக்கிறோம்” என்று புலவர் குழுவின் தலைவர் செல்லப்பன், செயலாளர் மறைமலை இலக்குவனார், துணைத்தலைவர்கள் அவ்வை நடராசன், கவா.மு.சேதுராமன் உள்ளிட்டோர் கூறியுள்ளனர்.