பாதியிலிருந்து ஓடிய தமிழ்த்தாய் வாழ்த்து!- கடுகடுத்த தம்பிதுரை

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்தாய் வாழ்த்து ஒலித்தபோது, காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் எழாமல் அமர்ந்திருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில்,கரூரில் மக்களவை துணை சபாநாயகர் கலந்து கொண்ட அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் இருந்து ஒலிக்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நேற்று மனிதநேய வாரவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தலைமை ஏற்றார். விழாவில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இருவரும் விழாவிற்கு தாமதமாக வந்தனர். வந்தவுடன் விழாவை தொடங்கச் சொன்னார் தம்பிதுரை. உடனே மைக் செட்காரர் தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிக்கவிட்டார். 

அப்போது,தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் இருந்து ஒலிக்க தொடங்கியது. இதனால்,நிருபர்கள் அமைச்சரைப் பார்க்க, அவர் தம்பிதுரை காதில் கிசுகிசுக்க,முகத்தில் கடுகடுப்பை பூசிகொண்ட தம்பிதுரை கலெக்டரை முறைத்தார். அவர் அதிகாரிகளைப் பார்க்க, அதற்குள் தமிழ்த்தாய் வாழ்த்து முழுவதும் ஓடி முடிந்திருந்தது. அதன்பிறகு,கலெக்டர் சத்தம் போட, பதறிப்போன மைக்செட்காரர் தமிழ்த்தாய் வாழ்த்தை மறுபடியும் சரியாக ஆரம்பத்தில் இருந்து ஒலிக்கவிட,மறுபடியும் எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். விழா முடிந்தததும் தம்பிதுரை கலெக்டரை கடிந்து கொள்ள,கலெக்டர் அதிகாரிகளை வறுக்க, அதிகாரிகள் மைக்செட்காரரை உண்டு இல்லை என்று பண்ணிவிட்டனர்.


 

விழா முடிந்தது வந்த தம்பிதுரையிடம் நிருபர்கள், "சென்னை விழாவில் விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கும்போது எழாமல் அமர்ந்திருந்தாரே?" என்று கேட்க, ஏற்கெனவே இந்நிகழ்விலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பாதியிலிருந்து ஓடிய கடுப்பில் இருந்த அவர்,"அதை அவர்கிட்டேயே போய் கேட்டுக்குங்க" என்றபடி, வேகமாக காரில் ஏறி பறந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!