``சட்டம், அடித்தட்டு மக்கள் வரை செல்கிறதா என்பது கேள்வி!" - பெண் நீதிபதி ஆதங்கம்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலையில், நேற்று புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட அறிவு விழிப்பு உணர்வு முகாம் நடைபெற்றது.

விவசாயிகளும், விவசாயம் சார்ந்த கூலித் தொழிலாளர்களும் அதிகம் வசிக்கும் மாவட்டமாக புதுக்கோட்டை  இருந்துவருகிறது. முன் எப்போதும் இல்லாத வகையில், அரசின் மக்கள் நலத் திட்டங்களைப் பயனாளிகள் பெறுவதற்கு ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு உள்ளிட்ட நிறைய விஷயங்கள் மத்திய, மாநில அரசுகளால் கட்டாயப்படுத்தப்பட்டு, அவை கெடு தேதி வைத்துத் துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன.

இதற்கும் அரசு வழங்கும் நலத் திட்டங்களைப் பெறுவதற்கும் யாரைப் பார்க்க வேண்டும்... என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றிய தெளிவும் புரிதலும் இந்த மாவட்டத்தின் மக்களுக்குத் தெரியாது. புதுக்கோட்டை மாவட்டம்தான் என்றில்லை, பெரும்பாலான மாவட்டங்களிலும் இதுதான் நிலைமை. இதைப் புரிந்துகொண்ட உச்ச நீதிமன்றம், இதுபோன்ற படிப்பறிவு இல்லாத மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் இலவச சட்ட விழிப்பு உணர்வு முகாம்களை அந்தந்த மாவட்ட நீதிமன்றம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்துமாறு சமீபத்தில் உத்தரவிட்டது. அந்த வகையில், தமிழ்நாட்டிலேயே இரண்டாவது இலவச சட்ட விழிப்பு உணர்வு முகாம் என்ற சிறப்புடன் இந்த முகாம் குடுமியான்மலையில் நடைபெற்றது.

முகாமில், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான தமிழ்ச்செல்வி, தலைமை வகித்துப்பேசினார். அப்போது, ``அனைவருக்கும் சட்டம் என்பது ஒன்றுதான். அதில் ஏற்றத்தாழ்வு என்பது கிடையாது.  சட்டத்தில் உள்ள பயனானது வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கவேண்டும். மக்களுக்காக நிறைய சட்டங்கள் இயற்றப்படுகின்றன. அவை, அடித்தட்டு மக்கள் வரை செல்கிறதா என்பதுதான் உச்ச நீதிமன்றம் வரை  எழும் கேள்வி. கிராமப்புற ஏழை எளியவர்களுக்கு சட்ட உதவிகள் எளிதாகக் கிடைப்பதை உறுதிசெய்தல்,  வழக்குச் செலவுக்கு பொருளாதார வசதியின்மையால் நீதிமன்றத்தை அணுக முடியாதவர்கள், இலவசச் சட்ட உதவி மற்றும் ஆலோசனை பெறுதல், மக்கள் தங்களின் உரிமையைப் பெறுதல் ஆகியவற்றை உறுதிசெய்யும் வகையில், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.

அரசின் பல்வேறு துறைகள் சார்ந்த நலத்திட்ட உதவிகள்குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ளவும், அந்தத் திட்டங்களின் பயன்களைப் பெறவும் அதுகுறித்த ஆலோசனைகளை வழங்கவும், திட்டங்கள்குறித்த விவரக்கையேடு வழங்கவும் இங்கு ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. உடலுழைப்புத் தொழிலாளர்கள், தொழிலாளர் நலத்துறையின் உறுப்பினர் அட்டையை இங்கு பெற்றுக் கொள்ளலாம்" என்றார்.
மேலும்,தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் பேரில் உதவி மையம், அரசு நலத்திட்ட விளக்கம் பெற ஸ்டால்கள், கழிவறை வசதி, குடிநீர் ஆகிய வசதிகளுடன் இந்த முகாம் நடத்தப்பட்டது கூடுதல் சிறப்பு. முகாமில் 11 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, 10 பயனாளிகளுக்கு வாரிசுச்சான்று, 10 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், 38 பயனாளிகளுக்கு தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!