வெளியிடப்பட்ட நேரம்: 08:10 (25/01/2018)

கடைசி தொடர்பு:08:10 (25/01/2018)

சாராயம் காய்ச்சிய ஊர் இன்றைக்கு செடிகள் வளர்க்குது!  ஓர் ஆச்சர்ய கிராமம்


பதினேழு வருடங்களுக்கு முன்பு வரை சாராயம் காய்ச்சுவதையே தங்களது முழு நேரத் தொழிலாகக்கொண்டிருந்த ஒரு கிராமம், இன்றைக்கு பூச்செடிகளும் மரக்கன்றுகளும் வளர்த்து, இந்தியா முழுக்க அனுப்பிவருகிறது. இப்படி ஒரு பெரும் மாற்றத்தை, பெரும்பாடு பட்டுக் கொண்டுவந்தது, ஒரு மகளிர் சுய உதவிக் குழு என்பது இதில் கூடுதல் ஆச்சர்யம்.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் தாண்டி, உள்ளடங்கி இருக்கும் சின்னஞ் சிறு கிராமம்தான், கல்லுக்குடியிருப்பு. இந்த ஊரில், வீட்டுக்கு வீடு பூச்செடிகள், மரக்கன்றுகள் வளர்க்கிறார்கள். எந்த வீட்டுக்குச் சென்றாலும் ஆயிரக்கணக்கான  மலர்ச்செடிகளும் மரக்கன்றுகளும் நம்மை வரவேற்கின்றன.

ஒரு சின்ன கிராமத்தில், இப்படி ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டிருப்பது நம்மை பிரமிக்கவைத்தது. அதைவிடப் பெரிய காரியம், இதை சாதித்தது, படிப்பறிவு இல்லாத கிராமத்துப் பெண்களைக்கொண்ட ஒரு மகளிர்  சுயஉதவிக்குழு என்பதை அறிந்தபோது, மலைப்புத் தட்டியது.  'செவ்வந்தி மகளிர் சுயஉதவிக்  குழு'தான் அது.  பருவ காலங்களில் விவசாயத்தையும், மற்ற காலங்களில் கூடைமுடைவதையும் நம்பியிருக்கும் பூமி.

'இது வயிற்றுக்குப் போதவில்லை, கைவசம் ஒரு தொழில் வேண்டும்' என்று யோசித்த அந்தக் கிராமப் பெண்கள், தங்கள் மண்ணையே நம்பி களத்தில் இறங்கினார்கள். தங்கள் ஊரைச் சூழ்ந்துநிற்கும் யூகலிப்டஸ், செம்மரம், தேக்கு, சந்தனமரம், மகாகனி மரங்களின் விதைகளைச் சேகரித்து, நர்சரித் தோட்டம் அமைக்க முடிவெடுத்தார்கள். கலெக்டரிடம் மனு கொடுத்தார்கள். இரண்டரை லட்சம் மானியம் கிடைத்தது. 'செவ்வந்திக் குழு' பூத்தது. விதைகள் முளைத்தன. அப்பெண்களின் வாழ்வு துளிர்த்தது. இதெல்லாம் நடந்தது 2001-ம் வருடத்தில். இன்றைக்கு  புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆலங்குடி, அன்னவாசல், கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, கொத்தமங்கலம் எனப் பல ஊர்களில் நடக்கும் வாரச் சந்தைகளில், கன்றுகளை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் பல மாநிலங்களுக்கும் ஆயிரக்கணக்கான செடிகளை இவர்கள் அனுப்பிவைக்கிறார்கள்.

'குழு ஆரம்பிச்சதிலிருந்து 17 வருடங்களா, வீட்டாளு கைய எதிர்பார்க்காம சொந்தக்கால்ல நிக்கிறோம்ங்க' என்கிறார், இதன் தலைவி காமாட்சி. மேலும் அவர், " எங்க ஊர்ல சாராயம் காய்ச்சி வியாபாரம் பண்றதுதான் தொழிலா இருந்துச்சு. குடி, போலீஸ் கேஸுனு ஒட்டுமொத்த கிராமமே அல்லோலகல்லோலப்பட்டுக் கிடந்துச்சு. ஆம்பளை ஆட்கள் வேலைக்குப் போக மாட்டாங்க. பொம்பளைங்க நாங்க கூலி வேலைக்குப் போறது, கூடை முடையிறதுனு இருந்தோம். வருமானம் பத்தல. கஞ்சிக்கும் வழி இல்ல. என்னதான் பண்றதுனு மனசொடிஞ்சு நின்னப்பதான் மகளிர் சுய உதவிக்குழு ஆரம்பிங்கன்னு பலரும் யோசனை சொன்னாங்க.

அப்படி ஆரம்பிச்சதுதான் இந்த 'செவ்வந்தி'க் குழு. இன்னிக்கு எங்க கிராமத்தைப் பலரும் ஆச்சர்யத்தோடு அண்ணாந்து பார்க்கிறாங்கன்னா, அதற்கு 17 ஆண்டுகள் நாங்கள் அர்ப்பணிப்பு.கடுமையான உழைப்பும் வைராக்கியமும் இருக்கு. ஊர் கூடித் தேர் இழுத்தோம். இன்றைக்கு உயரம் தொட்டிருக்கிறோம்" என்றார். பெண்கள்  நினைத்தால், வீட்டை மட்டுமல்ல ஊரையே மாற்ற முடியும் என்பதற்கு கல்லுக்குடியிருப்பே சாட்சி. இன்றைக்கு இந்த ஊரில் சாராயத்துக்கு வேலையே இல்லை.