குடியரசு அணிவகுப்பில் குஜராத் பாரம்பர்யம்! - ஆளுநர் பன்வாரிலாலை மையமிடும் அடுத்த சர்ச்சை

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

ந்திய குடியரசு தினத்தின் 69-ம் ஆண்டுவிழா, நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளில் மாநில அரசுகள் தீவிரமாக இயங்கி வருகின்றன. 'சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. ஆனால், இந்தமுறை பாரம்பர்ய நடன அணிவகுப்பில் குஜராத்தையும் இணைத்துவிட்டனர். எப்போதுமே இல்லாத நடைமுறை இது' எனக் கொதிக்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள். 

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்ட நாளில் இருந்தே அடுத்தடுத்த சர்ச்சைகள் அணிவகுத்துக் கொண்டிருக்கின்றன. மாவட்டங்களில் நடக்கும் அரசுப் பணிகளை ஆய்வுசெய்தது; ஆளும்கட்சி நிர்வாகிகளுடன் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிப்பது போன்றவை அரசியல் களத்தில் அதிர்வை ஏற்படுத்தின. 'ஆளுநர் ஆய்வு செய்ததில் எந்தவித விதிமீறலும் இல்லை' என பா.ஜ.க நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர். அரசியல் கட்சிகளின் தொடர் கண்டனத்தை அடுத்து ஆளுநர் மாளிகையும் விரிவான விளக்கத்தை அளித்தது. இந்த நிலையில், குடியரசு தின விழா கொண்டாட்டத்திலும் ஆளுநரை மையப்படுத்தி புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. 

தலைமைச் செயலக அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்றப் பிறகு முதன்முறையாக ஆளுநர் பன்வாரிலால் குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் கொடியேற்றுகிறார். கடந்த ஆண்டு குடியரசு தினவிழாவில் கொடியேற்றினார் ஓ.பன்னீர்செல்வம். இதற்கான அனுமதியை அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் அளித்தார். பன்னீர்செல்வமும் குடும்ப சகிதமாக கொடியேற்று விழாவில் பங்கேற்று சிறப்பித்தார். இந்த ஆண்டு நடக்கும் விழாவில் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டு தேசியக் கொடியை ஏற்றுகிறார் ஆளுநர். ஆனால், பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் சிறப்புகளும் தமிழக நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளதுதான் வேதனையளிக்கிறது" என விவரித்தவர், ``ஒவ்வொரு குடியரசு தினத்தன்றும் நாட்டின் ஒருமைப்பாட்டை விளக்கும் வகையில் பாரம்பர்ய நடனம், இசை ஆகியவை இடம் பெறுவது வழக்கம். இந்த ஆண்டு நடக்கும் குழு நடனங்களில் தமிழக அரசுப் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் 200 பேர் வரை கலந்துகொள்கின்றனர். இவர்களுக்கு பாம்பூ நடனம், கரகம் உள்ளிட்டவற்றில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. உயர்கல்வித் துறை சார்பில் வீர விளையாட்டுக்களான மான் கொம்பு, கத்திச் சண்டை ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற மாணவர்கள் திறமைகளை வெளிக்காட்ட உள்ளனர். இதுதவிர, அரசுத் துறைகளின் கண்காட்சி வாகனங்களும் இடம் பெறுகின்றன. விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக மூன்று முறை ரிகர்சல் நடப்பது வழக்கம். 

முதல் இரண்டு ரிகர்சல் நடக்கும்போது தமிழகம் தொடர்பான நிகழ்ச்சிகளே இடம் பெற்றிருந்தன. மூன்றாவது ரிசர்சலின்போது குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றிருந்தனர். எங்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. அதிகாரிகளிடம் கேட்டபோது, 'குஜராத்தின் பாரம்பர்ய நடனம், கலாசாரம் போன்றவையும் இடம் பெற உள்ளது. இவர்கள் நேரடியாக உள்ளே வந்தால் சர்ச்சை ஏற்படும் என்பதால், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மூலமாக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். நிகழ்ச்சிக்கான இரண்டு ரிசர்சலையும் தஞ்சாவூரிலேயே முடித்துவிட்டனர். மேலும், குஜராத்தின் சிறப்புகள் தமிழக குடியரசு விழாவில் இடம் பெற்றால் கேள்வி எழும் என்பதற்காக பஞ்சாப், மிசோரம் மாநிலத்தையும் இணைத்துவிட்டார்கள். இதற்காக, பெரும் எண்ணிக்கையில் அந்தந்த மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர். நாளைய விழாவில் குஜராத்தும் இடம் பெறுகிறது' எனத் தெரிவித்தார். இந்த நடைமுறை தமிழகச் சூழலுக்கு முற்றிலும் புதிது. நாட்டின் ஒருமைப்பாட்டை விளக்குவதுதான் நோக்கம் என்றால், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் கலாசார நடனங்களையும் இணைத்திருக்க வேண்டும். 'தமிழகத்தை ஆளும் அரசியல் கட்சி கேள்வி எழுப்பாது' என்ற காரணத்துக்காகதான், மத்திய அரசு இப்படியொரு புதிய நடைமுறையைப் புகுத்தியிருக்கிறது" என்றார் ஆதங்கத்தோடு. 

இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ``நாட்டின் கலாசாரத்தையும் ஒருமைப்பாட்டையும் விளக்கும் வகையில்தான் குழு நடனம், வீர விளையாட்டுகள் போன்றவை இடம்பெறுகின்றன. இதில், மாநிலங்களைப் பிரித்துப் பார்ப்பதில் நியாயம் இல்லை. ஆளுநரின் விருப்பத்துக்காகதான் குஜராத், பஞ்சாப், மிசோரம் மாநிலங்களின் குழு நடனங்கள் இடம்பெறுகின்றன. இதில் எந்தவிதத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. வழக்கம்போல, சிலர் இதனையும் அரசியல் ஆக்குகின்றனர்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!