'விவசாயிகள்தான் கடவுள்'- நெகிழ்ந்த பீடாதிபதி

கர்நாடக மாநில லிங்காயத் பஞ்சமலி ஜகத்குரு மஹாபீடம் சார்பில், மூத்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு தேசிய பசவ வேளாண் விருது வழங்கப்பட்டது. சென்னை தரமணியில், நேற்று (24.1.18) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டு விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

விருது வழங்கிப் பேசிய ஶ்ரீபசவ ஜெயம்ருத்யுன்ஜெய சுவாமிஜி, "கர்நாடகாவில் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பசவேஸ்வரர் ஒரு சமூக சீர்த்திருத்தவாதி. அவர் பெயரால் இந்த விருது வழங்கப்படுகிறது. அந்த பசவேஸ்வரர், விவசாயிகளைக் கடவுளாக எண்ணினார். அவர்களை மதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அது இன்றும் பொருந்திப்போகிறது. மனிதர்களுக்கு அடிப்படையானது உணவு. அதைக் கொடுப்பவர்கள், கடவுளுக்கு இணையானவர்கள். அதனால்தான் விவசாயிகளைக் கடவுள் என்று அழைக்கிறேன். விவசாயிகள் இல்லையேல் இந்தியா இல்லை. விவசாயத்தை அடிப்படையாகக்கொண்டது இந்தியா. சாமியார்களுக்கு மந்திரங்கள், வேதங்கள் முக்கியமாக இருப்பது போன்று, விவசாயிகளுக்கு முக்கியமாக இருப்பது, அவர்களின் நலன் சார்ந்த பிரச்னைகள். அது தீர்க்கப்பட்டால், அவர்களின் நலன் காக்கப்படும். விவசாய விளைபொருள்களின் விலை தொடர்பாக எம்.எஸ். சுவாமிநாதன் கமிஷன் முன்னெடுத்த பிரச்னை தீர்க்கப்பட வேண்டும். அந்த கமிஷன் ரிப்போர்ட்தான் விவசாயிகளின் புனித நூல். இந்த விருதை ஒரு கன்னடருக்குக் கொடுத்திருக்கலாம். ஆனால், தமிழ்நாடு, கர்நாடகா என்று பாரபட்சம் பார்க்காமல், இந்தியாவின் உணவு உற்பத்திக்கு வித்திட்டதற்காக எம்.எஸ்.சுவாமிநாதன் என்ற தமிழருக்கு, இந்த விருதைக் கொடுப்பதில் பெருமைகொள்கிறேன்" என்றார்.


எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியபோது, "உணவு, ஆரோக்கியத்துக்கு அடிப்படையானது. அதே உணவு, வருமானத்துக்கும் அடிப்படையானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். விவசாயத்தில் வருமான பாதுகாப்பு முக்கியம். உற்பத்தியும் வருமானமும் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். இன்று பருவநிலையும், விற்பனையும் விவசாயத்தின் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. விற்பனைக்கான  உறுதியான விலையும், சந்தையும் அமைந்தால்தான் விவசாயத்தில் நிலைத்து இருக்க முடியும். வரும் காலங்களில் விளைபொருள்களுக்குச் சரியான விலை கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!