வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (25/01/2018)

கடைசி தொடர்பு:16:03 (25/01/2018)

நித்யானந்தா ஆசிரமத்தில் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் - சி.பி.எம் கோரிக்கை

நித்யானந்தா

சி.பி.எம் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் கடந்த மூன்று நாள்களாக சென்னையில் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில், கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராசன், பி.சம்பத் மற்றும் மாநிலச் செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

நிறைவு நாளான இன்று (25-ம்தேதி), நித்யானந்தா சாமியார் விவகாரம் குறித்தும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு காஞ்சி மடத்தின் இளைய அதிபதி அவமதிப்பு செய்தது குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில், இதுகுறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மான விவரம் வருமாறு: 

”கடந்த ஆண்டு திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா என்கிற பல குற்ற வழக்குகளில் விசாரணையை எதிர்கொண்டுள்ள சாமியார் என்கிற போர்வையில் செயல்படும் நபரும், அவரது கூட்டத்தினரும் திருவண்ணாமலையின் அடிவாரத்தில் உள்ள பவளக்குன்றில் மூவாயிரம் ஏக்கருக்கும் அதிகமான அரசு நிலத்தையும், வன நிலத்தையும் ஆக்கிரமிக்க முயற்சித்தனர். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தடுத்து நிறுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த நித்யானந்தா கும்பல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வீரபத்திரன் மற்றும் தமுஎகச தலைவர்கள் கருப்பு கருணா, வெண்புறா சரவணன் ஆகியோர்மீது சமூக வலைதளத்தில் மிகவும் தரம்தாழ்ந்த பாலியல் வக்கிரத்துடன் கூடிய தாக்குதலைத் தொடுத்தது.

நித்யானந்தாவின் அடியாட்களை ஏவி தாக்குதல் முயற்சிகளிலும் ஈடுபட்டது. இதுகுறித்து கடந்த ஆண்டு காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில், காவல்துறை இயக்குநரிடமும் இதுகுறித்து முறையீடு செய்யப்பட்டது. இன்று வரையிலும் இவற்றின் மீது எந்த நடவடிக்கையையும் காவல்துறையினர் எடுக்கவில்லை. இந்நிலையில், சமீப காலமாக  கருப்பு கருணா, வெண்புறா சரவணன் ஆகியோர் மீதும் அவர்களின் குடும்பத்தினரை இணைத்தும் வக்கிரமான வீடியோக்களை வெளியிட்டு அட்டூழியம் செய்துவருகின்றனர். அந்த வீடியோக்களில் பேசுபவர்கள் 18 வயதுகூட நிரம்பாத இளம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இத்தகைய குழந்தைகள் பொதுவெளியில் காதால் கேட்கக் கூசுகிற வார்த்தைகளையும், சொல்லாடல்களையும் பயன்படுத்துவது அதிர்ச்சியளிக்கிறது.

அந்த வீடியோ காட்சிகள் பாலியல் வக்கிரத்தோடு அமைந்துள்ளதோடு சம்பந்தப்பட்ட தோழர்களுக்கும் குடும்பத்தினருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அமைந்துள்ளது. மேலும், சமீப காலமாக நித்யானந்தா கும்பல் தியானத்துக்கு அழைத்து வந்த ஆண் - பெண் குழந்தைகளை பெற்றோர்களுடன் அனுப்ப மறுப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. எனவேன் சம்பந்தப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும், நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு வயது சோதனை நடத்த வேண்டுமென்றும் அவர்களது பாதுகாப்பு குறித்தும் அவர்கள் அங்கு கொண்டுவரப்பட்ட சூழல் குறித்தும் அவர்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் நித்யானந்தா கும்பல் கை வசம் உள்ள நிலங்களின் உரிமை குறித்தும் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் மு.கந்தசாமி மீது கடந்த 16.1.2018 அன்று காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்து, பணியிடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.  

ஆளுநர் உட்பட்டோர் பங்கேற்றபொது நிகழ்ச்சியில் காஞ்சி சங்கரமட இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்துள்ளார். இதற்குக் கண்டனங்கள் எழுந்த பிறகு வெவ்வேறுவிதமான மழுப்பலான பதில்கள் சங்கர மடத் தரப்பிலிருந்து சொல்லப்படுகின்றன. இது ஏற்கத்தக்கதல்ல. மடாதிபதிகளாக இருந்தால் அரசியல் சட்டம், தேசியச் சின்னங்கள், மாநில மாண்புகள் இவற்றுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர்களாக நடந்துகொள்வதும், அதை நியாயப்படுத்துவதும் சமீப காலங்களில் அதிகரித்திருக்கிறது. விஜயேந்திரரின் இந்தச் செயலை மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது” என்று சி.பி.எம் கட்சியின் மாநிலக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.