வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (30/11/2012)

கடைசி தொடர்பு:17:57 (30/11/2012)

வைர விழா: தமிழக சட்டப்பேரவை மூத்த உறுப்பினர்களுக்கு பிரணாப் புகழாரம்

சென்னை: தமிழக சட்டப்பேரவை வைர விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.விழாவில் கலந்துகொண்டு பேசிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,தமிழக சட்டசபையில் இடம்பெற்ற பல மூத்த உறுப்பினர்களின் சிறப்பை புகழ்ந்து பேசியதோடு,ஆட்சியில் உள்ள குறைகளை சுட்டிக்காட்ட எதிர்கட்சிகளுக்கு உரிமை உள்ளது என்றார்.

தமிழக சட்டமன்ற பேரவை தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆவதையொட்டி, தமிழக  சட்டமன்ற பேரவையின் வைர விழா கொண்டாட்டம்,சென்னை புனித ஜார்ஜ்  கோட்டையில் உள்ள சட்டமன்ற பேரவை கூடத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு  தொடங்கியது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.ஆளுனர்  ரோசையா தலைமை தாங்கினார்.முதல் அமைச்சர் ஜெயலலிதா முன்னிலை வகித்தார்.
 
சபாநாயகர் தனபால் வரவேற்புரை நிகழ்த்தினார்.அதற்கு முன்னதாக முன்னாள் பிரதமர்  ஐ.கே. குஜ்ரால் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
 
இதையடுத்து ஜனாதிபதி, கவர்னர் ஆகியோருக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா  பொன்னாடை அணிவித்து சட்டமன்ற வைர விழா நினைவுப் பரிசை வழங்கினார்.

முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சபாநாயகர் நினைவுப் பரிசு வழங்கினார்.
 
1952-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த பட்டுக்கோட்டை கிருஷ்ணசாமி  கோபாலன், பொள்ளாச்சி மகாலிங்கம், திருமயம் பழனியப்பன் ஆகியோர்  கவுரப்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு  வழங்கப்பட்டது.

வைர விழா சிறப்பு மலர்
 
முதல் அமைச்சர் ஜெயலலிதா வைர விழா சிறப்பு மலரை வெளியிட, ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜி அதை பெற்றுக்கொண்டார்.

ஆளுனருக்கும் விழா மலர் பிரதி வழங்கப்பட்டது.இதைத்தொடர்ந்து முன்னாள்  எம்.எல்.ஏ.க்களுக்கு அரசினர் தோட்டத்தில் கட்டப்பட உள்ள புதிய விடுதிக்கு ஜனாதிபதி  பிரணாப் அடிக்கல் நாட்டினார்.
 
கவர்னர் ரோசையா, முதல் அமைச்சர் ஜெயலலிதா, சென்னை உயர் நீதிமன்ற  தலைமை நீதிபதி இக்பால் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சிறப்புரையாற்றினார்.

விஜயகாந்த் பங்கேற்பு

மேடையில் ஜனாதிபதியுடன் தமிழக ஆளுனர் ரோசய்யாவும், முதல்வர் ஜெயலலிதாவும்  அமர்ந்திருந்தனர்.

கீழே முன் வரிசையில் எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த், சட்டசபை எதிர்கட்சி துணை  தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், அமைச்சர்கள்,பல்வேறு கட்சிகளை சேர்ந்த  எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர்  கலந்துகொண்டனர்.

ஜெயலலிதா பேசுகையில், வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்கள் தமிழக சட்டசபையில்  நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், சட்டசபை வைரவிழா கொண்டாட்டங்கள் வரலாற்றில்  இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.

குறைகளை சுட்டிக்காட்ட எதிர்கட்சிகளுக்கு உரிமை உள்ளது

பிரணாப் பேசுகையில், தமிழக சட்டசபை பழம் பெருமை கொண்டது என்றும்,    ராஜகோபாலச்சாரியார்,காமராஜர்,அறிஞர் அண்ணா போன்ற பழம்பெரும் தலைவர்களைக்  கண்டடுள்ளதாகவும் கூறிய பிரணாப், அண்ணா முதல் காங்கிரஸ் அல்லாத முதல்வராக  பதவியேற்றதாக குறிப்பிட்டார்.

சென்னை மாநிலம் என்றிருப்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய அண்ணா  பாடுபட்டதாக தனது பேச்சில் குறிப்பிட்ட அவர்,சட்டசபையின் தீரராக சத்திய மூர்த்தி  விளங்கியதாகவும் கூறினார்.

மேலும் தமிழகத்தின் முதல்வராக எம்.ஜி.ஆர். சிறப்பாக சேவையாற்றியதாக குறிப்பிட்ட  அவர், சட்டசபையின் மூத்த உறுப்பினராக 5 முறை முதல்வராக இருந்த திமுக   தலைவர் கருணாநிதி செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் தற்போதைய சட்டசபை சிறப்பாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட  பிரணாப்,தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமை பண்புடனும்,மக்கள் நலனில்  அக்க்றையுடனும் செயலாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.

சட்டசபை 24 மணி நேரமும் விழுப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று  கூறிய் பிரணாப், முதலமைச்சரும்,அமைச்சர்களும் பேரவைக்கு பதிலளிக்க வேண்டிய  பொறுப்பு உள்ளது என்றும் கூறினார்.

முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும்போது அவசரம் காட்டக்கூடாது என்று கூறிய  பிரணாப்,எதிர்கட்சியினருக்கு ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்ட உரிமை உள்ளது  என்றும் தெரிவித்தார்.


திமுக புறக்கணிப்பு

இவ்விழாவில் திமுக உறுப்பினர்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளனர்.

முன்னதாக இன்று நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை வைர விழாவில் கலந்து  கொள்வதற்காக  டெல்லியிலிருந்து தனி விமானம் மூலமாக சென்னை விமான  நிலையத்தில் வந்து இறங்கினார். அவருக்கு தமிழக ஆளுனர் ரோசய்யாவும், முதல்வர்  ஜெயலலிதாவும் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்