ஸ்பீக்கர் கட்டி வாக்காளர் விழிப்பு உணர்வை மேற்கொண்ட பெண்கள்!

'தேசிய வாக்காளர் தினம்',  இன்று  (25-ம் தேதி) நாடெங்கும் முன்னெடுக்கப்படுகிறது. பேரணிகள், விழிப்பு உணர்வு துண்டுப் பிரசுரங்கள், கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றால், வாக்காளர்கள் தினம் களைகட்டியிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று பேரணிகள் நடைபெற்றன. புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில், தேசிய வாக்காளர் விழிப்பு உணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் கணேஷ் தொடங்கிவைத்தார். அதேபோல ஆலங்குடி, பொன்னமராவதி, அறந்தாங்கி உள்ளிட்ட பல முக்கிய ஊர்களிலும் பேரணிகள் சிறப்புடன் நடைபெற்றன.

இது, வழக்கமாக ஒவ்வொரு வருடமும் நடக்கும் விஷயம்தான் என்றாலும், இந்த வருடம் ஒரு முக்கியமான மாற்றம் இருந்தது. அது, முமுக்க முழுக்க பள்ளி மாணவ, மாணவிகளைக்கொண்டே பேரணிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அரசுக் கல்லூரிகள் இருக்கும் பகுதிகளில், மாணவ மாணவிகளும் பங்கேற்பது வழக்கம். ஆனால், இந்தமுறை அது நடக்கவில்லை. காரணம், பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து புதுக்கோட்டை மன்னர் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு இரண்டு நாள்கள் தீவிரமாகப் போராட்டம் நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் காலவரையற்ற விடுமுறையை அறிவித்துவிட்டது.

இதன் காரணமாக, போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் தங்களது ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். ஆனாலும் மாவட்ட நிர்வாகம் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்களைக்கொண்டு பேரணியை நடத்துமாறு உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. தொடக்கப் பள்ளிகள் மட்டுமே இருக்கும் சிறு கிராமங்களிலும் பொதுமக்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டார்கள்.  ஸ்பீக்கர் கட்டிய வாகனம் முன்செல்ல, விழிப்பு உணர்வுக் கோஷங்களை முழங்கியபடியும் பதாகைகளைச் சுமந்தபடியும், கிராம மக்களும் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்களும் உற்சாகமாகச் சென்றார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!