வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (25/01/2018)

கடைசி தொடர்பு:16:20 (25/01/2018)

'தமிழிசைக்கு காலம் பதில் சொல்லும்'- கடுகடுத்த செல்லூர் ராஜு

செல்லூர்

மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாளைப் போற்றும் விதமாக, மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழ் அன்னை சிலைக்கு பல்வேறு கட்சியினரும், சமூக அமைப்பினரும் மாலை அணிவித்து மறியாதைசெய்துவருகின்றனர். இந்நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “ஆண்டு தோறும் வீர வணக்க நாளில், தமிழ் அன்னை சிலைக்கு நான் மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம். இந்த ஆண்டும் மரியாதை செய்ததில் பெருமைகொள்கிறேன். மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற சமயத்தில்தான், இந்தத் தமிழன்னை சிலை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தலைமையில் இங்கு அமைக்கப்பட்டது. தமிழ் மொழிக்கு என்றென்றும் அம்மாவின் அரசு காவலாக நிற்கும் என உறுதி ஏற்கப்பட்டது.

நமக்கு நாமே திட்டத்தில், ஸ்டாலின் அமைப்புரீதியாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்றுவந்தார். அதேபோல, தற்போது கமல் 'நாளை நமதே' திட்டம் என வேறு ஒரு  நாடகம் நடத்திவருகிறார். இந்த 'நாளை நமதே' திட்டத்தில், கமல் ஒரு சினிமா நடிகர் என்ற காரணத்தால் மக்கள் பார்க்க வருவார்கள். இதையெல்லாம் வைத்து எடைபோட்டுவிடமுடியாது. அவரின் கட்சிக் கொள்கை, நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை வைத்துதான் நாம் எதையும் முடிவுசெய்ய முடியும். குறைந்த எண்ணிக்கையில் ஓட்டுகளை மட்டும் பெற்றுவரும் பாரதிய ஜனதா கட்சி, எவ்வாறு தமிழக ஆளும் கட்சியைக் குறைசொல்லுகிறது என்று தெரியவில்லை. தமிழிசைக்கு காலம் பதில் சொல்லும். தமிழிசை, தேசிய அளவிலான கட்சியில் இருந்துகொண்டு பலவற்றையும் பேசுகிறார். அவர், தனது பொறுப்பை உணர்ந்து பேசவேண்டும் . விஜயேந்திரர் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உள்ளது. அவர், உயரிய பண்பைக் கொண்டவர். வேறு எதுவும் அவரைப் பற்றி விமர்சனம் செய்யவில்லை. பா.ஜ.க-வை சார்ந்த நபர்கள், தமிழக அரசை ஏதாவது குறை சொல்ல வேண்டும் என எதையாவது சொல்லிவருகின்றனர். ஏன், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லையா? பஸ் கட்டணம் மட்டும்தான் உயர்ந்துள்ளதா... என்று ஆவேசப்பட்டார்.