வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (25/01/2018)

கடைசி தொடர்பு:16:40 (25/01/2018)

விஜயேந்திரர் மீது நடவடிக்கை கோரி போலீஸ் கமிஷனரிடம் புகார்!

சென்னையில், கடந்த செவ்வாய் அன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், தேசியகீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலிபரப்பும்போது,  எழுந்து நிற்காமல் அவமதிப்புசெய்த காஞ்சி சங்கரமட இளைய மடாதிபதி விஜயேந்திரர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்ப்புலிகள் கட்சி சார்பாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேரறிவாளன் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர், இன்று மதுரை மாநகர் காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தனர்.

அதில், அரசு மற்றும் பொது விழாக்களில் தேசியகீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்புவது இந்தியாவின் ஜனாதிபதி முதல் , கடைசி குடிமகன் வரை எழுந்து நின்று மரியாதைசெய்வது மரபாகும். இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற நூல்வெளியீட்டு விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரிலாலும், விஜயேந்திரரும் பங்கேற்றனர். இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலிபரப்பப்படும்போது அனைவரும் எழுந்து நின்றனர். ஆனால், விஜயேந்திரர் வேண்டுமென்றே உட்கார்ந்துகொண்டு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதித்துள்ளார். இது, தமிழ்த்தாயையும், தமிழர்களையும் அவமதிக்கும் செயலாகும். எனவே,  காஞ்சி சங்கர மடத்தைச் சேர்ந்த இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர் மீது வழக்குப்பதிவு செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என குறிப்பிடப்பட்டுள்ளது .