வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (25/01/2018)

கடைசி தொடர்பு:17:00 (25/01/2018)

``விஜயேந்திரர் மனம்வருந்தி உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும்!''- சீமான் காட்டம்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது எழுந்து நின்று மரியாதை செலுத்தாத விஜயேந்திரர் மனம்வருந்தி உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``பா.ஜ.க-வின் தேசிய செயலாளர்  ஹெச்.ராஜா நடத்திய ‘தமிழ் - சமஸ்கிருதம் அகராதி’ வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டபோது காஞ்சி சங்கரமடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி எழுந்து நின்று மரியாதை செலுத்தாது அமர்ந்திருந்தது கடும் கண்டனத்துக்குரியது. ஒட்டுமொத்தத் தமிழர்களின் உணர்வையும் இந்த அவமரியாதை பெரிதும் காயப்படுத்தியிருக்கிறது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும்போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார் என்று சிறுபிள்ளைத்தனமாகக் கூறும் காரணங்களை ஏற்க முடியாது. தமிழன்னையைத் தொழுகிற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படுகிறபோது அதற்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பது தமிழர் நிலத்தில் தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கப்படும் மரபு. நாட்டுப்பண் ஒலித்தபோது எழுந்து நின்று மரியாதை செலுத்த தெரிந்த விஜயேந்திரருக்கு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும்போது எழுந்து நிற்க வேண்டும் என்ற மாண்பு தெரியாதா? 

தமிழ் என்பது தமிழர்களுக்கு மொழியல்ல; அது உயிர்! தமிழர்களின் உயிரே மொழியில்தான் பொதிந்துக்கிடக்கிறது. புரட்சி பாவலன் பாரதிதாசன் பாடியதற்கிணங்க தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று மொழியை உயிருக்கு நேர் நிறுத்தி வாழும் கூட்டம் தமிழர் கூட்டம். தங்கள் பெயரோடு மொழியை இணைத்து பெயரிட்டு தாய்மொழியே தங்கள் அடையாளம் என்று வாழும் மக்கள் தமிழ் மக்கள். அம்மொழியைக் காக்க ரத்தம் சொரிந்து நிலத்தில் விதையாய் விழுந்தவர்கள் எங்கள் முன்னோர்கள். துறவறம் பூண்டு அறப்பற்று, புறப்பற்று என எல்லாவற்றையும் இழந்து பற்றற்று இருந்தபோதும் எங்கள் மொழி மீதான பற்றை எம் முன்னோர்கள் ஒருபோதும் இழந்ததில்லை. அதை வரலாறு நெடுகிலும் காணப்படும் பல்வேறு நிகழ்வுகள் காட்டுகிறது.

'நிழற்பொழி கணிச்சிமணி நெற்றியுமிழ் செங்கண் தழற்புரை சுடர்க்கடவுள் தந்தமிழ்’ என்று பெரும்பாட்டன் கம்பர் தமிழின் தொன்மையைக் கூறுகிறார். ‘உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்தீந் தமிழின் துறைவாய் நுழைந்தனையோ' என்று மாணிக்கவாசகர் தொழுகிறார். ‘இறையனாரும் எம்பெருமான் முருகவேளும் அகத்தியரும் கட்டிக் காத்த தமிழ்' என நக்கீரர் மெய்சிலிர்த்துப் பாடுகிறார். எங்கள் முன்னோர்கள் எங்கள் தாய்த்தமிழை இறையாகவே எண்ணித் தொழுது போற்றியிருக்கிறார்கள். எங்கள் தாய்த்தமிழானது அது மனிதர்களின் மொழியல்ல! அது ஓர் இறைமொழி! மொழிகளின் தாய்! உலகின் உன்னதத் திருமொழி! பல்வேறு பெருமைகளையும் சிறப்புகளையும் தாங்கி தனித்தே இயங்க வல்ல ஆற்றல் கொண்ட உலகின் தலைசிறந்த தொன்மை மொழி. அதுவே மாந்தர்களின் ஆதிமொழி என எங்கள் ஐயா பாவாணர் அறியத்தந்து நிறுவியிருக்கிறார். 

அத்தகைய தன்னிலடங்கா பெருமைகளை வாய்க்கப்பெற்ற தாய்த்தமிழைப் போற்றுகிற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும்போது எழுந்து நிற்காத ஜெயேந்திரரின் செயலானது பெருங்குற்றமாகும். தமிழர் நிலத்தில் சமஸ்கிருதத்தில் மந்திரங்களை ஓதித் தமிழையும் தமிழர்களையும் அவமதிக்கும் போக்கின் நீட்சியாக இதைப் பார்க்கிறோம். எங்கள் குல மூதாதை ஆண்டாளுக்காகத் தாங்கள் இறங்கி போராட்டம் நடத்திய பெருமக்கள், அந்த ஆண்டாளின் தாயான தமிழே அவமதிக்கப்பட்டிருக்கிறபோது கள்ளமௌனம் சாதிப்பது விந்தையாக இருக்கிறது. தன் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்பதென்பது மனித மாண்பு; அது மகான்களுக்கு இல்லையா. எங்கள் தாய்த்தமிழை அவமதித்த இந்நிகழ்வுக்காக விஜயேந்திரர் மனம்வருந்தி உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும்.'' இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.