வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (25/01/2018)

கடைசி தொடர்பு:18:00 (25/01/2018)

பணியிடங்களில் பாலியல் புகார் பெட்டி உட்பட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்!

தேனி மாவட்டத்தில் தேனி நகரம், ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய பகுதிகளில் மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், ரேஷன் பொருள்களைக் குறைக்காமல் இருத்தல், விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்தல், விளைபொருள்களுக்கு நியாயமான விலை கொடுத்தல், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,000 வழங்கிட சட்டம் இயற்ற வேண்டும். புதிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தைக் கைவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிட வேண்டும். குறிப்பாகப் போக்குவரத்துத் துறையைத் தனியாருக்கு கொடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும். தொழிலாளர் நலச்சட்டத்தில் எந்தவித திருத்தமும் செய்யக் கூடாது. பணியிடங்களில் பாலியல் புகார் பெட்டிகளை அமைத்திட வேண்டும் போன்ற 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தேனியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் CITU மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன். தொ.மு.ச மாவட்ட கவுன்சில் பொறுப்பாளர் முருகன், ஏஐடியூசி (AIUTUC) மாவட்டச் செயலாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர்.