``அனுபவமில்லாமல் தொழில் தொடங்குவதே நல்லது!'' - `கெவின்கேர்' சி.கே.ரங்கநாதனின் பிசினஸ் டிப்ஸ் | No experience need to start a business! - C.K.Ranganathan

வெளியிடப்பட்ட நேரம்: 16:13 (25/01/2018)

கடைசி தொடர்பு:16:14 (25/01/2018)

``அனுபவமில்லாமல் தொழில் தொடங்குவதே நல்லது!'' - `கெவின்கேர்' சி.கே.ரங்கநாதனின் பிசினஸ் டிப்ஸ்

சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களை ஊக்கப்படுத்தவும், அரசின் கடன் உதவிகளைப் பெற வழிகாட்டவும் நாணயம் விகடன் சார்பில் `பிசினஸ் A to Z' கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், கெவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதன் சிறப்புரையாற்றினார்.


 கெவின்கேர்

``தொழில்முனைவோர்கள், ஆர்வத்துடன் ஏதேனும் ஒரு தொழிலைத் தொடங்கிவிடுகிறார்கள். அப்போது எதிர்கொள்ளும் சிறு சிறு பிரச்னைகளால், தொழிலைத் தொடர்வதில் தயக்கம்காட்டுகின்றனர். அவ்வாறு தயங்காமல், தொடர்ந்து எதிர்நீச்சல் போட வேண்டும். அப்போதுதான் இலக்கை அடைய முடியும். 

தொழில்முனைவோருக்கு மூன்று முக்கியப் பண்புகள் இருக்க வேண்டும். முதலாவதாக, சமயோஜித புத்தி (emotional quotient). மனித உணர்வுகளை, எப்படி நமது தொழிலுக்குச் சாதகமாகப் பயன்படுத்தலாம் என்பதை தெளிவாகத் தெரிந்திருப்பதே சமயோஜித புத்தி. இரண்டாவதாக, வியாபாரப் புத்திசாலித்தனம் (business acumen). ஒரு பிசினஸைப் பார்த்தவுடனே இந்த பிசினஸ் நமக்குச் சரிப்பட்டு வரும்/வராது எனக் கணிக்கக்கூடிய உள்ளுணர்வைத்தான் `வியாபாரப் புத்திசாலித்தனம்' என்பார்கள். நம்முடைய தொழில்சார்ந்த அறிவும் மனக்கணக்குத் திறனும் சேர்ந்து சிந்திக்கும்போது அந்த உள்ளுணர்வு ஒரு தெளிவைக் கொடுக்கும். மூன்றாவது, தலைமைத்துவப் பண்பு (Leadership). இந்தப் பண்பில், வருங்காலத்தைக் கணிக்கும் திறன், ஓர் அணியைக் கட்டமைக்கும், ஈர்க்கும் திறமை போன்றவை அடங்கும்.

தற்போது உலக அளவில் தொழில் தொடங்குவதற்கு அற்புதமான சூழல் அமைந்துள்ளது. இதுபோன்ற சூழல் எல்லா காலங்களிலும் கிடைக்காது. கடந்த 20, 30 ஆண்டுகளில் பார்த்தால், தொழில் துறையில் மிகப்பெரிய மாற்றம் நடந்திருக்கிறது. அதாவது, ஐடி இண்டஸ்ட்ரியின் தாக்கம் தொழில் துறையின் உள்கட்டமைப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னரே பல தொழில்கள் காணாமல்போய்விட்டன. புதிய தொழில் வாய்ப்புகள் பல உருவெடுத்துள்ளன. தற்போது அமேசான் ஆன்லைன் நிறுவனம் கொடிகட்டிப் பறக்கிறது. இதற்கு முன்னர் பெரிய அளவில் இருந்த பார்ன்ஸ் & நோபிள்ஸ் போன்ற புத்தக விற்பனை நிறுவனங்கள் எல்லாம் காணாமல்போய்விட்டன. இணைய உலகில் முன்னணியில் இருந்த யாஹூ நிறுவனத்தை, அதற்குப் பிறகு வந்த கூகுள் முந்திவிட்டது. இதுபோன்ற புதிய மாற்றங்கள் உலக அளவில் நிறைய நடந்துகொண்டிருக்கின்றன.

நம் நாட்டில்கூட ஆன்லைனில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களைக் குறிப்பிடலாம். கல்யாணத் தரகர் மூலம் நடந்துவந்த திருமணங்களை மாற்றி, ஆன்லைனுக்குக் கொண்டுவந்துள்ளது பாரத் மேட்ரிமோனியல் நிறுவனம். தற்போது மாதத்துக்கு இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட திருமணங்களை நடத்திவைக்கும் பெருநிறுவனமாக அது உருவெடுத்துள்ளது. அதன் நிர்வாகத்தினர் பெரிய முதலீடு எதையும் செய்வதில்லை. புத்திசாலித்தனம்தான் இவர்களின் வெற்றிக்கு முக்கியக் காரணியாக உள்ளது.

கெவின்கேர்

நான் எந்த வியாபாரத்தில் நுழைவதாக இருந்தாலும் அதைப் பற்றி முடிவெடுக்க ஆறுவிதமான விஷயங்களைக் கவனிப்பேன். 

1) நாம் தொடங்கும் தொழிலால் நம்முடைய செயல்திறன் வீணாகக் கூடாது. நமது முதலீட்டுத் தொகையை மீறி, பிரமாண்ட முயற்சிகளில் இறங்கி செயல்திறனை வீணடிக்கக் கூடாது. 

2) புதிய தொழில் முயற்சிக்கான தயாரிப்பு முதலீடு அதிகமாக இருக்கக் கூடாது. தொழிலில் நமக்கு அனுபவமும், குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் எட்டும் சூழலில் முதலீட்டை அதிகப்படுத்தலாம். 

3) புதுமை முயற்சியாக இருக்க வேண்டும். ஆனால், அந்தப் புதுமையானது மக்களுக்கும்  பயனுள்ளதாக இருக்க வேண்டும். அமெரிக்காவில் ஒருவர் புதுமையாகச் சிந்திப்பதாக நினைத்துக்கொண்டு, நாய்களுக்கான ஐஸ்க்ரீம் தயாரிக்கிறேன் என்று இறங்கி மொத்த பணத்தையும் இழந்தார். ஆக, புதுமை முயற்சி என்பது மக்களின் தேவை அடிப்படையில் இருக்க வேண்டும். அதேபோல நம்மால் செய்ய முடிந்ததாகவும் இருக்க வேண்டும். 

4) லாப சதவிகிதம் அதிகம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தொடக்கத்திலேயே லாப சதவிகிதம் அதிகமாக வைத்திருந்தால், சின்னச் சின்னத் தவறுகள் காரணமாகக் கீழே விழ நேர்ந்தாலும் எழுவதற்கு உதவியாக இருக்கும். நாங்கள் ஷாம்பு விற்பனை தொடங்கியபோது 75 சதவிகிதம் லாபம் வைத்து விற்பனை செய்தோம். அந்த லாபத்திலிருந்துதான் பணியாளர் ஊதியம், கட்டட வாடகை, தினசரி அலுவலகச் செலவுகள், மின்சாரம்... என அனைத்துக்கும் எடுக்கவேண்டியிருக்கும். லாப சதவிகிதத்தை வெறும் 15 சதவிகிதம், 20 சதவிகிதம் என வைத்திருந்தால், எங்களால் நிறுவனத்தை நடத்தவே முடியாமல்போயிருக்கும்.   

5) நம்முடைய தொழில், அதிக மதிப்புடையதாக இருக்க வேண்டும். பிற்காலத்தில் விற்பதாக இருந்தாலும் அதற்கு நல்ல விலை கிடைக்குமா, அதற்கான மதிப்பு இருக்குமா எனப் பார்க்க வேண்டும். 

6) எதிர்காலத்தில் ஆன்லைனால் அதற்கு பாதிப்பு வருமா என்பதைப் பார்க்க வேண்டும். காலத்திற்கேற்ப ஆன்லைன் விற்பனைக்கும் கொண்டுசெல்ல உகந்ததாக இருந்தால் நல்லது.

கெவின்கேர்

எனது மகனும் மகளும் இதே தொழில் துறைக்குள் வந்துள்ளார்கள். அவர்களும் தொழில் செய்ய விரும்பியபோது, `நீங்களே பிசினஸ் தொடங்குங்கள். என்னுடைய பிசினஸுக்கு வர வேண்டாம். நீங்களே செய்தால்தான் அனுபவம் கிடைக்கும்' என அறிவுரை கூறினேன். அப்போது அவர்கள் தொழில் தொடங்க எவ்வளவு முதல் கொடுக்கப்போகிறேன், 5 கோடி ரூபாய் அல்லது 10 கோடி ரூபாய் கொடுப்பேனா என எதிர்பார்த்தார்கள். ஆனால், நான் அவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்தேன். `இதை வைத்து ஒரு தொழிலைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக்காட்டுங்கள். அதன் பிறகு வங்கியில் கடனுதவி பெற்றுத்தருகிறேன்' என்றேன். உடனே அந்தத் தொகையை வைத்து எனது மகன், சிகே'ஸ் பேக்கரி என்ற பெயரில் ஒரு பேக்கரியைத் தொடங்கினான்.

ஒரு பேக்கரி தொடங்குவது என்றால், பத்து முதல் பதினைந்து லட்சம் ரூபாய் வரை செலவாகும். அதன் பிறகு கடைக்கும் தனியாகச் செலவழிக்க வேண்டும். ஆனால், அவன் புத்திசாலித்தனமாக கடையை மட்டும் தொடங்கினான். அந்த பேக்கரிக்கான பொருள்களை வேறு ஒருவரிடமிருந்து வாங்கி விற்பனை செய்தான். எனவே, நீங்கள் தொழில் தொடங்கும்போது அனைத்தையும் நீங்களே செய்ய வேண்டும் என நினைக்காதீர்கள். நமக்குத் தேவை, அனுபவம் மட்டுமே. முதலில் அனுபவத்தைக் கற்றுக்கொண்டு, வெற்றியை எட்ட வேண்டும். அவன் அப்படி தொடங்கிய முதல் மாதத்திலேயே 16,000 ரூபாய் லாபம் ஈட்டினான். இரண்டாவது மாதம் 59,000 ரூபாய். மூன்றாவது மாதம் 64,000 ரூபாய். நான்காவது மாதம் 90,000 ரூபாய் லாபம் ஈட்டினான். அதன் பிறகு அவன் கேட்டுக்கொண்டதால் மேலும் இரண்டு கடைகளைப் போட்டுக் கொடுத்தேன். அந்தக் கடைகளும் லாபமாக இயங்கத் தொடங்கின. `இன்னும் பெரிய அளவில் நடத்தப்போகிறேன்' என்றதும், அவனுக்கான வங்கிக் கடன் உதவியைப் பெற்றுத் தந்தேன். தற்போது தொழில் தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே அவன் 60 கடைகளை நடத்திவருகிறான்.

பிசினஸ் தொடங்குவதற்கு நல்ல வயது, இளம் வயதுதான். அந்த வயதில் அனுபவம் ஏதுமில்லாமல் ஆரம்பிப்பதே நல்லது. அப்போது நிறைய தோல்விகள் ஏற்படலாம். அனைத்துமே நமக்கு அனுபவமாக அமையும். எங்களது நிறுவனத்துக்கு ஆள் எடுப்பதாக இருந்தால்கூட, யாராவது பிசினஸ் தொடங்கி தோல்வியடைந்தவராக இருந்தால் அவரைத்தான் முதலில் வேலைக்குச் சேர்ப்போம். ஏனெனில், அவர்களிடம் நிறைய அனுபவம் இருக்கும். அது தொழிலுக்கு உதவும். இவற்றையெல்லாம் கவனத்தில்கொண்டு ஒரு தொழிலைத் தொடங்கினால், வெற்றி என்பது எளிதான ஒன்றுதான்" என நம்பிக்கையளிக்கும்விதத்தில் தனது வாழ்க்கை அனுபவங்களை விளக்கினார் சி.கே.ரங்கநாதன்.


டிரெண்டிங் @ விகடன்