மூன்று சுவைகளுடன் பால் தரும் வேப்பமரம்!


25 வருடங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவிலும் பிள்ளையார் பால் குடிக்கிறார் என்ற பரபரப்பு தீயாய் பற்றிக்கொண்டது நினைவிருக்கலாம். அதைத்தொடர்ந்து அவ்வப்போது போதிய இடைவெளிவிட்டு அதுபோன்ற பரபரப்புகள் எழுவது வழக்கமாக இருந்து வந்தது. இப்போது அப்படியானதொரு சம்பவம் புதுக்கோட்டையில் நடந்து பரபரப்பைக் கொளுத்திப் போட்டிருக்கிறது. `வேப்பமரத்திலிருந்து பால் வடிகிறது. அது, கசப்பே இல்லாத மூன்று சுவைகளுடன் இருக்கிறது' என்பதுதான் அது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ளது ஏனாதி என்ற கிராமம். இங்கு அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோயில் வளாகத்தில் ஒரு வேப்பமரம் உள்ளது. கடந்த ஒரு வாரமாக இந்த வேப்பமரத்தில் பால்வடிந்துகொண்டிருக்கிறது. இதைப் பார்த்த பொதுமக்கள் பரபரப்பாகிவிட்டனர். தங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் போன் செய்து, 'எலெ, சேதி தெரியுமா. நம்ம ஊரு பிள்ளையார் கோயில்ல சாதுவாட்டம் வளர்ந்து நிக்குமே ஒரு வேப்பமரம். அதுக்கு தெய்வசக்தி வந்துடுச்சு. ஒரு வாரமா மரத்திலிருந்து பால் சுரக்குது. ஊரே கூடிநின்னு வேடிக்கை பார்க்குது. மரத்துக்கு முன்னாடி நின்னு நாம என்ன வேண்டிக்கிட்டாலும் நடக்குது.  வாகனங்கள் வைத்திருப்பவர்கள் விரைந்து வந்து பார்த்துச் செல்லுகிறார்கள். பஸ்ஸில் மட்டுமே வந்து போகிற நிலைமையில் இருப்பவர்கள், தங்களுக்கு போன் செய்தவர்களிடம், 'வேலையெல்லாம் போட்டுட்டு எனக்கும் வரணும்னு ஆசைதான். பஸ்ஸூக்குக் கொள்ளைக்காசை ஏத்திவிட்டாய்ங்களே. எப்படிக்கா வர்றது' என்று புலம்புகிறார்கள். அதற்கு, "வர்றதுக்கு மட்டும் காசை தோது பண்ணிட்டு வாடி. திரும்பிப் போறதுக்கு நான் தர்றேன் "என்கிறார்களாம் ஏனாதி கிராமப் பெண்கள்.

இப்படி கடந்த ஒரு வாரமாக சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஏராளமானோர் அந்த வேப்பமரத்தை வேடிக்கை பார்த்து வருகின்றனர். 
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, "ஒரு வாரமா பால் வடியுது. இந்தமரத்தில் வரும் பால் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவையுடன் இருக்கு. கசப்பு கொஞ்சம்கூட இல்லை. வேப்பமரத்தில் பால் வடிஞ்சா, அந்த மரத்தில் மாரியாத்தா குடி வந்துருக்கானு பெரியவங்க சொல்லுவாங்க. எங்க ஊரில் உள்ள இந்த மரத்திற்கும் தெய்வ சக்தி உள்ளது'' என்று கூறினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!