வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (25/01/2018)

கடைசி தொடர்பு:20:20 (25/01/2018)

வீடுதேடிச் சென்று 101 வயது வாக்காளரைக் கெளரவித்த கலெக்டர்!

தேசிய வாக்காளர் தினத்தில் 101 வயது முதிர்ந்த வாக்காளருக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.

தேசிய வாக்காளர் தினத்தில் கெளரவிக்கப்பட்ட வயது முதிர்ந்த ராமநாதபுரம் வாக்காளர்
 

1950-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்டது. இந்த நாளை தேசிய வாக்காளர் தினமாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்பு உணர்வு பேரணிகள் நடந்தன. ராமநாதபுரம் அரண்மனையின் முன்பு இருந்து இந்த வாக்காளர் விழிப்பு உணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

 

ராமேஸ்வரத்தில் நடந்த வாக்காளர் தின பேரணி

இதன் பின் ராமநாதபுரத்தை அடுத்துள்ள தெற்கு தரவை கிராமத்தில் வசித்து வரும் 101 வயதுடைய மூத்த வாக்காளரான ஹவ்வாம்மாள் என்பவரை சந்தித்த மாவட்ட ஆட்சியர் நடராஜன், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். தொடர்ந்து ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதுடன், தேசிய வாக்காளர் தினம் குறித்து நடந்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, கோட்டாட்சியர் பேபி, தேர்தல் பிரிவு வட்டாட்சியர்  நித்தியானந்தம் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

ராமேஸ்வரத்தில் நடந்த வாக்காளர் விழிப்பு உணர்வுப் பேரணியைக் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தொடங்கி வைத்தார். அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணி பருவதவர்த்தினி பெண்கள் பள்ளியில் நிறைவடைந்தது. அங்கு போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் தலைமை ஆசிரியர்கள் முத்துமாணிக்கம், கமலா, ஆசிரியர்கள் ஜெயகாந்தன், பழனிச்சாமி, தினகரன், சூசைரெத்தினம் மற்றும் நுகர்வோர் அமைப்பு, ரோட்டரி சங்கம், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பங்கேற்றனர்.