வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (25/01/2018)

கடைசி தொடர்பு:21:00 (25/01/2018)

வேடிக்கை பார்க்க வந்த திருநங்கைகளை நெகிழ வைத்த கலெக்டர்!

வாக்காளர் விழிப்பு உணர்வு பேரணியை வேடிக்கை பார்க்க வந்த திருநங்கைகளை தஞ்சாவூர் ஆட்சியர் அழைத்து நீங்களும் பேரணியில் கலந்துகொண்டு கோஷமிடுங்கள் என்றதோடு அவர்களை எல்லோருக்கும் முன்பாகவும் பேரணியில் செல்ல வைத்தது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.

வருஷம்தோறும் ஜனவரி 25-ம் தேதி தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் வாக்களர்களின் விழிப்பு உணர்வுக்காகப் பேரணி மற்றும் நிகழ்ச்சிகள் தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெறும். தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற வாக்காளர் விழிப்பு உணர்வுப் பேரணி ரயிலடியில் தொடங்கி அரண்மனை பகுதியில் முடிவடைந்தது. அப்போது பணம் வாங்கிக்கொண்டு யாரும் வாக்களிக்கக் கூடாது. நல்ல பிரதிநிதிகளை ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும். அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் எனக் கோஷங்களும் போடப்பட்டன.

முன்னதாக ஆட்சியர் அண்ணாதுரை பேரணியைக் கொடி அசைத்துத் தொடங்கி வைக்க வந்திருத்தார். பேண்டு வாத்தியங்கள் முழங்க கல்லூரி மாணவிகள் வாக்காளர் விழிப்பு உணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கையில் பிடித்து, பேரணிக்குத் தயாராக நின்றனர். இதைக் காண்பதற்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் திருநங்கைகள் அந்த இடத்தில் கூடியிருந்தனர். திருநங்கைகள் நிற்பதைக் கவனித்த ஆட்சியர், அவர்களை அழைத்து வாக்காளர்களின் சிறப்புகளை எடுத்து சொன்னதோடு விழிப்பு உணர்வு வாசகங்கள் அடங்கிய ஃப்ளெக்ஸ் பேனரைக் கையில் கொடுத்து பிடிக்கச் சொன்னார். அதோடு கல்லூரி மாணவிகள் மட்டுமல்லாமல் எல்லோருக்கும் முன்பாகவும் பேரணியில் கோஷங்கள் போட்டவாறு செல்ல வைத்தார். அவர்களும் அப்படியே செய்ய எல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர்.

வேடிக்கை பார்க்க வந்த எங்களுக்கு மரியாதையோடு முன்னுரிமையும் கொடுத்தார் ஆட்சியர்" என நெகிழ்ச்சியோடு சென்றனர்  திருநங்கைகள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க