வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (25/01/2018)

கடைசி தொடர்பு:17:50 (25/01/2018)

ஆந்திர போலீஸுக்கு வகுப்பெடுத்த சென்னை போலீஸ் ! - வேட்டையாடு, விளையாடு! பகுதி - 16 


 

                        சென்னை  தனிப்படை போலீஸ் ஜி.லோகநாதனுக்கு விருது 

இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

ப்போது,  நாங்கள்  எதிர்பார்க்காத ஒன்று நடந்தது. ஆந்திர ஸ்பெஷல் டீமின் சப்- இன்ஸ்பெக்டர், நவீன் சார் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டார். 'சார், எங்களுக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது, தயவு செய்து முடியாது என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்' என்றார். அவர் கண்களும், 'எங்களைக் கை விட்டு விடாதீர்கள் சார்' என்று தெலுங்கில் டைப் அடித்துக் கொண்டிருந்தது. ஆந்திரா ஸ்பெஷல் டீமில் இவர் மட்டுமே கொஞ்சம் தமிழ் தெரிந்தவர். அந்த வகையில், எங்கள் ஜே.சி. சைலேந்தர் சாரின் கடித விவரம் அவருக்குத் தெரியும். தொடர்ந்து  நவீன் சாரிடம், 'முண்டேல்பாஜூவைப் பல ஆண்டுகளாக நாங்கள் தேடி வந்தோம். இரண்டுமுறை இன்ஃபார்மர்கள் மூலம் ஆளை 'ட்ரேஸ்' செய்து அவன் தங்கியிருந்தப் பகுதியை ரவுண்ட் செய்தும் எப்படியோ, தப்பித்து விட்டான். எங்களுக்குத் தகவல் கொடுத்த இன்ஃபார்மர்கள் அதற்குப் பிறகு என்ன ஆனார்கள் என்றும் தெரியவில்லை. முண்டேல்பாஜூ, உங்களிடம்  மாட்டிக் கொண்டதை சென்னைக்குப் போகும் வரையில் ரகசியமாக வைத்திருங்கள். மீடியாவுக்குத் தெரிய வேண்டாம். நீங்கள் அவனை வைத்து நகைகளை ரெக்கவரி செய்து முடித்தபின் எங்களிடம் நான்கு நாள்கள் மட்டும் கொடுங்கள். ஐந்தாவது நாள், நாங்களே அவனை சென்னைக்குக் கொண்டு வந்து உங்களிடம் கொடுத்து விடுகிறோம். அதற்குப் பின்  அவனை நீங்கள் கோர்ட்டில் ஒப்படைத்து விடுங்கள். ஆந்திர போலீஸ் டி.ஐ.ஜி. சுரேந்திரபாபு சார், எங்கள் டீமில் 25 பேருக்கு 'ஓலை' யை ரெடியாகக் கையில் வைத்திருக்கிறார். முண்டேல்பாஜூ பிடிபட்ட அன்று உங்களுக்குப் பிரியாணி உள்ளே போனது போல் எங்களுக்கு பிரியாணி உள்ளே இறங்கவில்லை சார்... ப்ளீஸ்...' என்றார். சில நிமிடங்கள் யோசனைக்குப் பின்,  'இதுபற்றி எங்கள் ஜே.சி மற்றும் டி.சி.யிடம்  பேசி விட்டுத்தான் என்னால் எதையும் சொல்ல முடியும். முடிந்தவரைக்கும் உதவச் சொல்கிறேன்' என்ற நவீன் சார், முண்டேல்பாஜூ பக்கம் திரும்பினார். 


                 தனிப்படை டீம் இன்ஸ்பெக்டர் என்.நவீன், ஏ.சி.பி. கே.ஆர்.விட்டல்ராமன்

'வெள்ளிக்கிழமையில் மட்டும் நீங்கள் கொள்ளையைத் திட்டமிட்டது ஏன், போலீஸ் குடியிருப்புகளை மட்டும் குறிவைத்தது ஏன் ? சென்னைக்கு நீங்கள் இரவில்தான் வருவதாகச் சொல்கிறீர்கள். பகலில் வந்து வேவு பார்த்தோம் என்று விசாரணையில் சொல்லவில்லை. ஆக, எந்தத் திட்டமும் இல்லாமல் மிகச் சரியாக ஆள் இல்லாத வீடுகளில் மட்டும் திருடியிருக்கிறீர்கள், இது எப்படி சாத்தியம்? வந்த வேலை முடிந்ததும், ரயிலேறி விடுவோம் என்றும் சொல்கிறீர்கள். சென்னையில் பல வீடுகளில் திருட்டை நடத்தியிருக்கிறீர்கள். எந்த சந்தேக வழக்கிலும் உங்களைப் போலீஸார் இதுவரையிலும் பிடிக்கவில்லை. உங்களுடைய 'நெட்வொர்க்' கை நாங்கள் இன்னும் சரியாகக் கணிக்கவில்லை என்று தோணுகிறது. திருட்டு வேலை தவிர, இன்னும் பல குற்றங்களைச் செய்திருக்கிறீர்கள் என்று மனதில் படுகிறது. நீங்கள் மொத்தமே மூன்று பேர்தானா ? உங்களைச் சுற்றி 'மாஃபியா' கும்பல் இருக்கிறதா என்பது குறித்தெல்லாம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. உங்களிடம் பப்ளிக் பறிகொடுத்த நகைகளையும், போலீஸ் குடியிருப்புகளில் நீங்கள்  திருடிய நகைகளையும் மீட்டுக் கொண்டுதான் சென்னைக்குத் திரும்புவோம், அதில் எந்த மாற்றமும் இல்லை. உங்களை விசாரித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, தண்டனை வாங்கித்தரத்தான் இன்று காலை வரையில் நினைத்திருந்தோம். ஆனால்,  அந்தக் கொடுப்பினை உங்களுக்கு இல்லை போலிருக்கிறது.  உங்கள் சாவுக்கு மாலை போட வருகிற பாதிபேர், உங்களைக் கொலை செய்த வழக்கில் சிக்கப்போகிறார்கள், அதைப் பார்க்க நீங்கள்தான் இருக்கப்போவதில்லை. யாருக்காக கொள்ளை, கொலைகளைச் செய்தீர்களோ அவர்கள் அனைவருமே உங்கள் சாவுக்குப்பின் ஜெயிலில் இருக்கப் போகிறார்கள். திருடினால் சில நாடுகளில் குற்றவாளிகளைக் கல்லால் அடித்துக் கொல்வது சட்டமாக்கப்பட்டிருக்கிறது.' என்று சொல்லி விட்டு நவீன் சார் பேச்சை நிறுத்தி விட்டார்.அப்போது முண்டேல்பாஜூ,  ' ... சார், இப்பவே என்னால் நடக்க முடியவில்லை, எங்கும் தப்பிக்கவும் தெம்பு இல்லை. யார், எவ்வளவு அடித்தாலும் நான் அழமாட்டேன், அதனால் என்னை நீங்கள் தவறாக நினைத்து விட்டீர்கள். நகைகள் இருக்கும் இடத்தையும், வாங்கிய ஆட்களையும் பற்றி உங்களுக்கு ஏற்கெனவே  சொல்லிவிட்டேன், நீங்கள் கூப்பிட்ட இடத்துக்கு வந்து நகைகளை வாங்கிய ஆட்களை நேராகவேக் காட்டுகிறேன். இனி ஆந்திர போலீஸும் எங்களை விட்டு வைக்கப் போவது இல்லை. நகைகளை முதலில் மீட்டு விடுங்கள், சென்னைக்கு உங்களுடன்தான் நாங்கள் வரப்போகிறோம். போகும் வழியில் எல்லாவற்றையும் சொல்லி விடுகிறோம் சார்... ' என்றான்.


முண்டேல்பாஜூவின் விளக்கத்தை நவீன் சார் எவ்வளவு தூரம் ஏற்றுக்கொண்டார் என்பதைக் கூட அவர் முகம் முழுமையாக பிரதிபலிக்கவில்லை. ஆந்திர ஸ்பெஷல் டீம் எஸ்.ஐ. யை அருகில் கூப்பிட்டு, முண்டேல்பாஜூ சொன்ன அடையாளங்களை வைத்து அந்த நகை வியாபாரிகளின் முகவரிகளை உடனே வாங்கச் சொன்னார். அப்போது ஆந்திர எஸ்.ஐ., 'சார், முண்டேல்பாஜூ சொல்லும் ஆட்களில் இரண்டு பேர், ஆந்திர நகை வியாபாரிகள் சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள், இங்குள்ள பெரும்பான்மை சமுதாயத்தின் பின்னணியும் அவர்களுக்கு இருக்கிறது. தொழில் போட்டி காரணமாகத்தான் மற்றொரு தரப்பு, போலீஸைத் தூண்டி விடுகிறது' என்றுதான் முதலில் போராட ஆரம்பிப்பார்கள். அடுத்து சாதியைக் கையில் எடுப்பார்கள். அதற்குப் பிறகு மறியல் செய்ய நெடுஞ்சாலை க்கு வருவார்கள், பஸ்களை ஓட விடாமல் செய்வார்கள். இந்தச் செய்தி வெளியில் பரவினால், அது முதலமைச்சர் வரையில் போகும். மேலும், நீங்கள் இந்த வழக்கோடு சென்னைக்குப் போய் விடுவீர்கள்... நாங்கள் இங்குதான் இருந்தாக வேண்டும். டெக்னாலஜியில் நாங்கள் உங்களை விட பல மடங்கு முன்னேறியிருப்பது உண்மைதான். 'இன்டெலக்‌ஷூவல் வொர்க்' கில் உங்களை நெருங்க முடியாது, இரண்டுநாள்களாக அதை நாங்களே அருகிலிருந்து பார்க்கிறோம். நீங்கள்தான் இதற்குத் திட்டமிட வேண்டும். போலீஸ் ஃபவர், 'வெப்பன்'ஸ் எவ்வளவு தேவையென்றாலும் அது உடனே கிடைக்கும். நீங்கள் எங்கள் டி.ஐ.ஜி. அய்யாவிடம் கொஞ்சம் பேசி விடுங்கள்.' என்றார்.அப்போது இன்ஸ்பெக்டர், " எங்கள் ஜே.சி. சைலேந்தர் அய்யாவும், டி.சி.மௌர்யா சாரும் இதுபற்றி உங்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். நகைகளை வாங்கிய ஆட்களின் முகவரியை மட்டும் நீங்கள் வாங்கிக் கொடுங்கள், மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். பெரிய அளவுக்கு போலீஸைக் குவிக்க வேண்டிய அவசியமும் இல்லை. உங்களுக்கு 'நகை ரெக்கவரி' யை எப்படி செய்கிறோம் என்பதை சொல்லித் தருவதாக நேற்றே சொல்லியிருந்தேன்... அதை இன்று நேரடியாகவே நீங்கள் பார்க்க ஒரு வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள். இனி ஆந்திரா போலீஸிலும் அதையே செய்யுங்கள்' என்றார். அப்போது விசாரணைக் கட்டடத்தின் வாசலில் ...
 (தொடரும்)


டிரெண்டிங் @ விகடன்