எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு : இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

  சிவகங்கை: காவல்துறை உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் கொலை வழக்கில் முக்கிய  குற்றவாளிகளாக கருதப்படும் பிரபு மற்றும் பாரதி இருவரும் தப்பி ஓட முயன்றபோது, அவர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி காவல் நிலைய எஸ்.ஐ.யாக பணியாற்றியவர் ஆல்வின் சுதன்.

இவர் கடந்த அக்டோபர் 27ம் தேதி மருதுபாண்டியர் நினைவு தினத்தின்போது வேம்பத்தூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அங்கு, முளக்குளத்தை சேர்ந்த செல்லப்பாண்டியன் தரப்பிற்கும், புதுக்குளத்தைந் சேர்ந்த பிரபு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டது. இது குறித்து விசாரணைக்கு சென்ற ஆல்வின்சுதனை, பிரபு கோஷ்டியினர் வெட்டி கொன்றுவிட்டு தப்பினர்.

எஸ்.ஐ. கொலை வழக்கில் பிரபு, மகேஷ்வரன், முத்துக்குமார் ஆகிய 3 பேரும் நவம்பர் 6 ஆம் தேதியன்று திருப்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.அப்போது 3 பேர் தரப்பிலும் மாஜிஸ்திரேட்டிடம் தாக்கல் செய்த மனுவில், "எங்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை. எங்களை அழைத்து செல்லும் வழியில் என்கவுன்டரில் போலீசார் கொலை செய்து விடுவார்கள் என அஞ்சுகிறோம்" என கூறப்பட்டிருந்தது.  

இந்நிலையில், அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சிலர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்களில், பிரபு, பாரதி ஆகிய இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த விரும்புவதாக போலீசார் சிவகங்கை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

அதைத் தொடர்ந்து, பிரபு, பாரதி ஆகியோரை சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, ஆயுதப்படை போலீசார் சித்திரைவேல் மற்றும் போலீசார் நேற்று வேனில் அழைத்து சென்றனர். மதுரை வாக்கர்ஸ் கிளப் அருகே பிரபு, பாரதி இருவரும் சித்திரைவேல் மற்றும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சித்திரைவேல் உள்ளிட்ட 4 போலீசாருக்கு காயம் ஏற்பட்டதாம்.அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

இதனையடுத்து இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய பிரபு, பாரதி இருவரையும் தேடி வந்த நிலையில், தப்பி ஓடிய 2 பேரும் நேற்று ஒரு பைக்கில், மேலமேல் குடி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர்.

எஸ்.ஐ.பூமிநாதன் மற்றும் 2 போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரைப் பார்த்ததும் 2 பேரும் ஆயுதங்களுடன் தாக்கினர். அதில் 3 பேரும் காயமடைந்தனர். இந்த தகவல் மைக் மூலம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த டிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான அதிரடிப்படை அங்கு விரைந்து வந்தது. அவர்களைப் பார்த்ததும், தப்பி ஓடிய 2 பேரும் வெடிகுண்டுகளை வீசினர்.

இதனால் போலீசார் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். அதில் 2 பேரும் படுகாயமடைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அவர்களை உடனடியாக மதுரை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், ஆனால் அவர்கள் இருவரும் .வழியிலேயே இறந்து விட்டதாக   டாக்டர்கள் கூறிவிட்டதாகவும்  காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

போலீஸ் எஸ்.ஐ.யை தாக்கிய 2 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தென் மாநிலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!