வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (25/01/2018)

கடைசி தொடர்பு:13:24 (10/07/2018)

`பொங்கல் வைக்காமல் விடப்போவதில்லை' - தலையில் பானையுடன் வந்த பெண்கள்

``மாட்டுப் பொங்கல் வைக்க அனுமதி கொடுங்கள். ஆக்கிரமிப்புச் செய்ய நினைக்கும் பணம் படைத்தவர்களுக்குத் துணை போகாதீர்கள்" என்று தேத்தாம்பட்டி கிராம மக்கள் எழுப்பிய உரிமைக்குரலால் திருவரங்குளம் வருவாய் ஆய்வாளர் அலுவலக வளாகமே அதிர்ந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகில் உள்ளது தேத்தாம்பட்டி என்ற கிராமம். இந்த மக்கள் பரம்பரை பரம்பரையாக ஊரில் பிரதானமாக இருக்கும் பொது இடத்தில் பொங்கல் வைத்து வந்தனர். அந்த இடத்தில் தொடக்கப்பள்ளி, பிள்ளையார் கோயில் ஆகியவை உள்ளன. இதில் மிக முக்கியமான விஷயம், அந்த இடம் அரசுக்குச் சொந்தமானது. ஊரின் நடுவே வியாபார முக்கியத்துவம் கொண்ட இடமாக அது இருந்ததால், அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய சிலர் முயற்சி மேற்கொண்டனர். கடந்த வருடம் ஊர்கூடி பொங்கல் வைக்க மக்கள் திரண்டபோது, கணேஷ் நகர் காவல்துறையினர் தடுத்தனர். தங்களது பாரம்பர்ய பழக்கத்தையும் நம்பிக்கையையும் உரிமையையும் ஆக்கிரமிப்பாளர்கள் போலீஸாரின் துணைகொண்டு தடுப்பதா என்று ஆவேசம் கொண்ட தேத்தாம்பட்டி கிராம மக்கள் உடனடியாக நீதிமன்றம் சென்றனர். நீதிமன்றமும் மக்களுக்கான உரிமையை உறுதி செய்தது. ஆனாலும், அப்போது பொங்கல் வைக்க முடியவில்லை. இந்த வருடம் அப்படி ஏதும் நடந்துவிடக் கூடாது என்று முடிவெடுத்த மக்கள், மாவட்ட சார் ஆட்சியர் சரயுவிடம் மனு கொடுத்தனர். மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கும் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. அவரது உத்தரவின்படி சமாதான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டு முறை ஏற்பாடு செய்யப்பட்ட சமாதான கூட்டத்துக்கு ஆக்கிரமிப்பு செய்யத்துடிக்கும் தரப்பினர் என்று கிராம மக்களால் குற்றம் சுமத்தப்படும் தரப்பினர் வரவில்லை. ஆகையால்,பொங்கல் வைக்க
இந்த ஆண்டும் அனுமதி மறுக்கப்பட்டது.

இந்தநிலையில், மக்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி களத்தில் இறங்கியது. ஊர் மக்களின் உரிமையை மீட்டெடுக்கும் முனைப்புடன் அந்த ஊர்மக்களைத் திரட்டி பெருந்திரள் போராட்டத்தை இன்று (25.1.2018) திருவரங்குளம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நடத்தியது. போராட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் செங்கோடன் பேசும்போது, "வருஷா வருஷம் கிராம மக்கள் இந்தப் பொது இடத்தில்தான் மாட்டுக்குப் பொங்கல் வைப்பது வழக்கம். மாடுகளையும் கொண்டு வந்து இங்குள்ள பிள்ளையார் கோயிலில் நிறுத்தி, அவர்கள் நம்புகிற வழிபாட்டு முறைகளைக் கொண்டு மாடுகளுக்கு சிறப்புச் செய்வார்கள். பொங்கலை மாட்டுக்கு வைப்பார்கள். பாரம்பர்யமாக நமது மண் சார்ந்த இந்தக் கொண்டாட்டத்தைத் தடுக்கவும் அரசு அதிகாரிகளைக் கையில் போட்டுக்கொண்டு, எதிர்காலத்தில் பெரும் வணிக வாய்ப்புள்ள இந்த இடத்தை ஆக்கிரமிக்க ஊரில் உள்ள சிலர் தீவிரம் காட்டி வருகிறார்கள். அவர்களது முயற்சிகளுக்கு பெரும் தடையாக இருப்பது இந்தப் பொங்கல் விழாதான். அதற்கு இடையூறு ஏற்படுத்தும் முயற்சியில் அதிகாரிகளையும் காவல்துறையையும் வைத்துக்கொண்டு ஈடுபட்டு வருகின்றனர். அது நடக்காது. இந்த வருடம் பொங்கல் வைக்கும் உரிமையை நாங்கள் நிறைவேற்றாமல் விடப்போவதில்லை" என்றார். இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள்  பொங்கல் பானையைத் தலையில் வைத்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். வயதான பாட்டி ஒருவர் போஸ்டரைக் கையில் பிடித்தபடி தனது உணர்வை வெளிப்படுத்தினார்.