ரஜினி, கமல், வைரமுத்து, விஜயேந்திரர்.... பின்னணி தெரியுமா?

ஜெயலலிதா மறைவு அதையொட்டிய அரசியல் மாற்றங்கள் மற்றும் நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் என மக்கள் பிரச்னைகளில் ஆரம்பித்து, தற்போது நடிகர்களின் அரசியல் பிரவேச அறிவிப்புகள் வரை தொடர்ந்து செய்திகளால் பரபரத்துக் கொண்டேயிருக்கிறது தமிழகம். சமீபமாய் தமிழகத்தை தடதடக்க வைத்துக்கொண்டிருக்கும் இந்தச் செய்தி நிலவரங்கள் குறித்தும் அதன் பின்னணிகள் குறித்தும் கீழே காண்போம்.... 

டி.டி.வி தினகரன்

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் சர்ச்சைகள்

ஜெயலலிதா மறைவையடுத்து, கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலானது பணப்பட்டுவாடா குற்றச்சாட்டைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது. மீண்டும் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில், சுயேச்சை வேட்பாளரான டி.டி.வி தினகரன் அமோக வெற்றி பெற்றார். இரட்டை இலை, கட்சி அங்கீகாரம் என இரண்டு பலமான அஸ்திரங்களைக் கொண்டிருந்தும் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் தரப்பு வேட்பாளரான மதுசூதனன் தோல்வியடைந்தார். மக்கள் செல்வாக்குப் பெற்ற அ.தி.மு.க தலைமை யார்... என்ற கேள்விக்கு விடைதேடும் களமாகப் பார்க்கப்பட்ட ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. தமிழக ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாகவும் சசிகலா தரப்புக்கு எதிராகவும் மத்திய பி.ஜே.பி அரசு செயல்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுவந்த நிலையில், டி.டி.வி தினகரனின் இந்த இமாலய வெற்றி அவரது தரப்புக்கு மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. புது கட்சி, தமிழகச் சுற்றுப்பயணம் என டாப் கியரில் தினகரன் பயணிக்கவிருப்பதாக வெளிவரும் செய்திகள் எதிர்தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.

ரஜினிகாந்த்

ரஜினி அரசியல் பிரவேசம்

'வருவாரா, வரமாட்டாரா...' என்று 20 வருடங்களுக்கும் மேலாக எதிர்பார்ப்புகளை மட்டுமே ஏற்படுத்திக்கொண்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேச அறிவிப்பை கடந்த ஆண்டின் கடைசி நாளில் அறிவித்தார். 'ஆன்மிக அரசியல்' 'காவலர் படை' மற்றும் 'போராட்டங்கள்' குறித்த ரஜினியின் அறிவிப்பு ஆகியவை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. 'பி.ஜே.பி பின்னணியில் வருகிறார் ரஜினி, தமிழரல்லாத ரஜினி தமிழர்களை ஆள்வதற்கு ஆசைப்படக் கூடாது' என்று அவரது அரசியல் பிரவேசத்துக்கு எதிராக காரணங்களும் சொல்லப்படுகின்றன. ஆனால், தன்னைப்பற்றிய செய்திகளுக்கு மட்டுமல்ல... தமிழகப் பிரச்னைகள் குறித்தும்கூட எந்தவித நிலைப்பாடோ, கருத்தோ தெரிவிக்காமல், வழக்கம்போல் மௌனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த்; ஆனாலும் அதிர்ந்துகொண்டிருக்கிறது தமிழகம்!

கமல்ஹாசன்
 

கமல் அரசியல் பிரவேசம்

ரஜினியின் அறிவிப்புக்கு முன்பே, தமிழக அரசியலுக்குள் தான் வந்துவிட்டதாக அறிவிப்பு செய்த நடிகர் கமல்ஹாசன், அடுத்தடுத்து அதற்கான முன்னேற்பாடுகளிலும் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். ஆளும் கட்சிக்கு எதிரான அவரது விமர்சனங்கள் தினசரி செய்திகளாயின. பிப்ரவரி 21 ஆம் தேதி தனது அரசியல் கட்சிப் பெயரை அறிவிக்கப்போவதாகச் சொல்லியிருக்கும் கமல்ஹாசன், தனது அரசியல் பயணத்தின் முதற்கட்டமாக கிராமங்களைத் தத்தெடுக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 'நாளை நமதே' என்ற பெயரில் மக்களைச் சந்திக்கவும் தயாராகிவிட்டார் உலகநாயகன்!

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
ஆளுநர் ஆய்வு

தமிழக அரசியலில், சமீபகாலமாக மத்திய பி.ஜே.பி அரசின் தலையீடு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோகித், தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு விசிட் செய்து ஆட்சி அதிகாரத்தில் உள்ள அதிகாரிகளோடு ஆலோசனை செய்த விவகாரம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. ஆனாலும் ஆளுநரின் ஆய்வு தொடர்கிறது. 'மரபு மீறுகிறார் ஆளுநர்' எனச் சொல்லி கறுப்புக்கொடி ஏந்தி எதிர்ப்புத் தெரிவிக்கிறது எதிர்க்கட்சியான தி.மு.க. ஆனால், ஆளுநரின் செயல்பாடுகளுக்கு 'பச்சைக் கொடி' காட்டி வரவேற்கிறது அ.தி.மு.க.!

பேருந்து கட்டண உயர்வு

பேருந்துக் கட்டண உயர்வு

தமிழகப் போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் பணபலன்கள் சரிவர கிடைப்பதில்லை என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஏற்கெனவே தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளன. ஆனாலும் தீர்வு கிடைக்காத நிலையில், இம்மாத ஆரம்பத்திலேயே மீண்டும் தங்களது போராட்டத்தைத் தொடங்கினர். பெரும்பான்மையான ஊழியர்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் உறுதியுடன் இருந்ததால், ஒட்டுமொத்தமாக தமிழகமெங்கும் அரசுப் போக்குவரத்து முடங்கிப்போனது. பின்னர், சில நிபந்தனைகளோடு தொழிற்சங்கங்கள் போராட்டத்தை தளர்த்தியதையடுத்து நிலைமை சீரானது. ஆனால், அடுத்த அதிரடியாகப் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி அறிவித்த தமிழக அரசு, 'போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வுகளைச் சமாளிக்க கட்டண உயர்வு அவசியம்' என்பதையும் காரணமாகச் சொல்லி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க, கட்டண உயர்வினைத் தாக்குப்பிடிக்க முடியாத பொதுமக்கள் அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்திக்கொண்டேயிருக்கிறார்கள்.

வைரமுத்து

ஆண்டாள் சர்ச்சை

தமிழுக்குத் தொண்டு செய்த ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து, ஒரு நாளிதழில் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்த கட்டுரை பலத்த சர்ச்சையைக் கிளப்பியது. இதைத்தொடர்ந்து, 'ஆண்டாளை அசிங்கப்படுத்திவிட்ட வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து வைரமுத்து தனது வருத்தத்தினைப் பதிவுசெய்தார். ஆனாலும் வைரமுத்துவுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 'வைரமுத்து பேசியதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை' என உயர்நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. ஆனாலும், இந்து அமைப்புகளுக்கும் தமிழார்வலர்களுக்கும் இடையே தொடர்ந்து பற்றி எரிகிறது இவ்விவகாரம்.

விஜயேந்திரர்
 

விஜயேந்திரரின் தியானமும் சர்ச்சையும்

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின்போது எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. மாறாக அதே நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். அவரது இந்தச் செயல்பாடு, பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் ஆர்வலர்களும், அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்திருப்பதோடு விஜயேந்திரர் மன்னிப்பு கோரவேண்டும் என்ற கோரிக்கையோடு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். 'தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலிக்கப்பட்டபோது, விஜயேந்திரர் தியான நிலையில் இருந்ததால், எழுந்து நிற்கவில்லை' என விளக்கம் சொல்லியிருக்கிறது காஞ்சி மடம்!

 

'காரணம் இல்லாமல் காரியம் இல்லை' என்பார்கள். தமிழகத்தை ஒருவித படபடப்புக்குள்ளேயே வைத்திருக்கும் இப்பிரச்னைகளுக்குப் பின்னேயும் பலதரப்பட்ட 'அரசியல் கணக்குகள்' ஒளிந்துகிடக்கின்றன என்று கருத்துத் தெரிவிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். எது எப்படியோ.... எல்லாச் செயல்பாடுகளையும் தீர ஆராய்ந்து, பகுத்தறிவோடு சிந்திப்பது மட்டுமே தெளிவு கிடைப்பதற்கான ஒரே வழி! சிந்திப்பார்களா தமிழக மக்கள்?
 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!