`600 கோடி பேர் உங்களுக்கு வாக்களித்தனரா?' மோடியின் பேச்சுக்கு சி.பி.எம் கண்டனம் | CPI(M) condemns Modi's speech

வெளியிடப்பட்ட நேரம்: 20:08 (25/01/2018)

கடைசி தொடர்பு:20:08 (25/01/2018)

`600 கோடி பேர் உங்களுக்கு வாக்களித்தனரா?' மோடியின் பேச்சுக்கு சி.பி.எம் கண்டனம்

உலக நாடுகள் மத்தியில் மோடி பேசும்போது இந்தியாவைச் சங்கடப்படுத்துவதையும், தலைகுனிவு ஏற்படுத்துவதையும் நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், '’சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நேற்றுமுன்தினம் உலகப் பொருளாதார மாநாடு நடைபெற்றது. 60 நாடுகளின் தலைவர்கள், பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட 1,500-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, 2014-ம் ஆண்டு பா.ஜ.க கட்சி பெற்ற வெற்றியையும் தனக்கு மக்கள் அளித்த வாக்குகளையும் மிகைப்படுத்தி கூறினார். அவர் பேசுகையில், ’30 ஆண்டுகளுக்குப் பின், கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக, 600 கோடி இந்தியர்கள் (6 பில்லியன்) பா.ஜ.க-வுக்கு வாக்களித்து மத்தியில் ஆட்சியில் அமரச் செய்து இருக்கிறார்கள்’ என்று தெரிவித்தார்.

இந்தப் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து, தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் படங்களை வெளியிட்டு கருத்துகளைத் தெரிவித்தது. ‘பிரதமர் மோடி, நீங்கள் சார்ந்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 31 சதவிகிதம் வாக்குகள் மட்டுமே பெற்றது. ஆனால், நீங்களோ 600 கோடி இந்தியர்கள் உங்களுக்கு வாக்களித்து தேர்தலில் வெற்றி பெறச் செய்தார்கள் என டாவோஸ் மாநாட்டில் பேசியுள்ளீர்கள். 

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் 121 கோடி மக்கள் மட்டுமே இருக்கிறார்கள், 2014-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் 81 கோடி மக்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை இருந்தது எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் மத்தியில் பேசும் நீங்கள் இந்தியாவை சங்கடப்படுத்துவதையும் தலைகுனிவு ஏற்படுத்துவதையும் நிறுத்த வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த ட்விட்டர் பதில் பதிவேற்றம் செய்யப்பட்ட பின், பிரதமர் மோடியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்தும், பா.ஜ.க-வின் ட்விட்டர் பக்கத்தில் இருந்தும் அந்த வாசகங்கள் நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது' என்று பதிவிட்டுள்ளார்.