வெளியிடப்பட்ட நேரம்: 09:33 (26/01/2018)

கடைசி தொடர்பு:09:33 (26/01/2018)

"தேசியகீதம் பாடும்போது தியானம் என்ன ஆனது?" - அரசியல் தலைவர்கள் கேள்வி!

விஜயேந்திரர்

விஞர் வைரமுத்து பேசிய ஆண்டாள் பற்றிய சர்ச்சைக்குப் பிறகு, தமிழகத்தில் இன்னொரு சர்ச்சை தொடங்கியுள்ளது. பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய, ‘தமிழ் - சமஸ்கிருதம் அகராதி’ நூல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு நூலை வெளியிட்டார். விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது, ஆளுநர் உள்பட அனைவரும் எழுந்து நின்றனர். ஆனால், இந்த விழாவில் கலந்துகொண்ட காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் மட்டும் எழுந்து நிற்காமல் தனது இருக்கையிலேயே அமர்ந்திருந்தார். இது, தற்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் நிலையில், இந்தச் செயலுக்குத் தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. இந்த நிலையில், “தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது விஜயேந்திர சரஸ்வதி தியானத்தில் இருந்தார்” என சங்கர மடம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இருந்தாலும், தமிழை அவமதித்துவிட்டார் என அவருக்கு எதிராகத் தொடர்ந்து கண்டனக் குரல்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன. இதுகுறித்து பிரபலங்கள் கூறிய கருத்துகளை இங்கே பார்ப்போம்...

கவிஞர் வைரமுத்து: 

“தேசிய கீதம் என்பது தாய்நாட்டை மதிப்பது; தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தாய்மொழியை மதிப்பது. இரண்டும் சம அளவில் மதிக்கப்படவேண்டியவை”.

தமிழிசை சௌந்தரராஜன் (தமிழக பி.ஜே.பி. தலைவர்):

“விஜயேந்திரர் விவகாரத்தையும் வைரமுத்து விவகாரத்தையும் ஒன்று சேர்க்காதீர்கள்”.

வைகோ (ம.தி.மு.க. பொதுச் செயலாளர்):

“தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது இளைய மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி எழுந்து நிற்காதது, தமிழையும் தமிழ்நாட்டையும் அவமதிப்பதாக உள்ளது. இந்தச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதற்கு அவர் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும்”.

நடிகர் கமல்ஹாசன்:

“கண்ட இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்கக் கூடாது. தியானத்தில் இருப்பது விஜயேந்திரரின் கடமை; எழுந்து நிற்பது எமது கடமை”.

அமைச்சர் கடம்பூர் ராஜு:

“தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டபோது விஜயேந்திரர் எழுந்திருக்காதது தவறுதான். அப்போது அவர் தியானத்தில் இருந்ததாகக் கூறுகிறார்கள். எந்த நிலையில் இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்தின்போது அவர் எழுந்திருக்க வேண்டும். ஏன் எழுந்திருக்கவில்லை என அவர்தான் விளக்க வேண்டும்”.

தொல்.திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்):

“விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்க விரும்பாமல் அமர்ந்தபடியே இருந்துள்ளார். நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அவர் எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளார். அவர் வேண்டுமென்றே தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்திருக்கிறார். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அவர்மீது தமிழக அரசு வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவர், தமிழக மக்களிடம் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்க வேண்டும்”.

மருத்துவர் எஸ்.ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்):

“தமிழராக இல்லாவிட்டாலும்... தமிழின் சிறப்பை அறிந்து அதைக் கற்றுவரும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும், மூத்த தமிழறிஞரான சாலமன் பாப்பையாவும் முதுமையைப் பொருட்படுத்தாமல் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்தினர். ஆனால், விஜயேந்திரர் தியானம் செய்ததாகக் கூறப்படுவதை எந்தவகயிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தச் செயலுக்குத் தமிழராகிய உங்களுக்கு ரத்தம் கொதிக்கவில்லையா? தமிழா, தமிழால் ஒன்றுபடு... தமிழால், இனதால் ஒன்றுசேர். தமிழ் வாழ்க”.

அமைச்சர் செல்லூர் ராஜு:

“விஜயேந்திரர் பற்றி விமர்சிக்க நான் விரும்பவில்லை”.

மு.க.ஸ்டாலின் (தி.மு.க செயல் தலைவர்) :

“தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரருக்கு தி.மு.க சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஆளுநர் முன்பாக இது நடந்தது கண்டனத்துக்குரியது. விஜயேந்திரரின் தவற்றை மறைக்கவே தியானம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தின்போது தியானத்தில் இருந்தவர், தேசிய கீதத்தின்போது எழுந்து நின்றது எப்படி?”.

மதுரை ஆதீனம்:

“எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அதற்குரிய மரியாதையைச் செலுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் காஞ்சி மடாதிபதி இளைய பீடாதிக்கும் இருக்கிறது. அவ்வாறு எழாமல் இருப்பது அவருக்குச் சிறுமையை சேர்திருக்கிறது. தமிழ்நாட்டில்தான் காஞ்சி மடம் இருக்கிறது என்பதை விஜயேந்திரர் நினைவில்கொள்ள வேண்டும்”.

சீமான் (நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்) :

“என் தாய் தமிழுக்கு மதிப்பு கொடுக்காதவர் எதற்காகத் தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்த வேண்டும்? உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால்,  கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்”.

இப்படித் தலைவர்கள் கருத்துகள் ஒருபுறம் இருக்க... மறுபுறம், சமூக வலைதளங்களில் அவரைப்பற்றி மீம்ஸ் வைரலாகி வருகின்றன. தமிழகத்தில் ஓர் ஆண்டுக் காலமாகவே ஒரு சர்ச்சை முடிவதற்கு முன்பே... இன்னொரு சர்ச்சை ஆரம்பமாகிறது என்பது வழக்கமாக இருக்கிறது. இப்படிச் சர்ச்சைகள் எழும்பி மறைவதுதான் தமிழகத்தின் சாதனையா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்