வயலில் அறுந்து விழுந்த மின்கம்பி - சாம்பலான 2 ஏக்கர் நெற்பயிர்!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே வீரன் வயல் என்ற கிராமத்தில் வயலில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் அறுவடைக்குத் தயாராகயிருந்த 2 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் எரிந்து சாம்பலாயின. 

திருவாரூர் மாவட்டம் வீரன் வயல் கிராமத்திற்கு ஆலங்காட்டி பகுதியிலிருந்து விளைநிலங்கள் வழியாக மின்சாரக் கம்பங்கள் அமைத்து மின்சாரம் கொண்டு வரப்படுகிறது. வீரன் வயலில் தனமணி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் மின்கம்பம் ஒன்று அமைக்கப்பட்டு உயர் அழுத்த மின்கம்பியானது செல்கிறது. இந்நிலையில் இன்று (25.1.2017) மதியம் மின்கம்பி வயலில் அறுந்து விழுந்ததில் கதிர்கள் முற்றி அறுவடைக்குத் தயாரான நிலையிலிருந்த நெற்கதிர்கள் எரியத் தொடங்கின. 

உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், தொழிலாளர்களும்  தீயை அணைக்க முற்பட்டும் தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வாகனமானது வடகாடு பாலத்தை தாண்டி வரமுடியாத அளவுக்குச் சாலை குறுகலாக இருந்தது. இதனால் வாகனம் இல்லாமல் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், அந்தப் பகுதியில் கிடைத்த தண்ணீரை ஊற்றி, தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், அதற்குள் 2 ஏக்கர் பரப்பிலான வயலில் இருந்த சம்பா நெற்பயிர்கள் முழுவதும் எரிந்து போயிருந்தது. தீயணைப்பு வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டதால்,  அருகாமையில் உள்ள சுமார் 500 ஏக்கர் நிலங்கள் தீ விபத்திலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளன.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!