9 பேர் உயிரிழப்பு; மருத்துவமனையில் 500 பேர்! 2 மாவட்ட விவசாயிகளை அச்சுறுத்தும் பூச்சிக்கொல்லி மருந்து | Pesticide poisoning kills 9 farmers in Ariyalur, Perambalur districts

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (26/01/2018)

கடைசி தொடர்பு:00:00 (26/01/2018)

9 பேர் உயிரிழப்பு; மருத்துவமனையில் 500 பேர்! 2 மாவட்ட விவசாயிகளை அச்சுறுத்தும் பூச்சிக்கொல்லி மருந்து

அரியலூர், பெரம்பலூர் இரு மாவட்டங்களில் பூச்சிக்கொல்லியைத் (மருந்தை)தெளித்த அதன் வீரியம் தாங்காமல் இதுவரையிலும் ஒன்பது விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். விவசாயிகளின் இறப்பு நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே செல்கிறது. ஆனால் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளின் இறப்பை கொச்சைப்படுத்துவதாக புதிய சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

                          

ஆட்சியரை கடுமையாக விமர்சனம் செய்யும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செல்லதுரையிடம் இதுகுறித்துப் பேசினோம். "மோனோ குரோட்டாபாஸ் என்ற பூச்சிக்கொல்லி விஷத்தை பருத்தி வயலில் தெளித்தபோது அதன் வீரியம் தாங்கமுடியாமல் கூத்தூரைச் சேர்ந்த ராமலிங்கம், சித்தளி ராஜா, ஒதியத்தைச் சேர்ந்த செல்வம் மற்றும் பசும்பலூரைச் சேர்ந்த அர்ஜூனன், தேவேந்திரன் என 5 விவசாயிகள் பெரம்பலூரில் இறந்திருக்கிறார்கள். அரியலூரில் ராமன், திருப்பதி, லோகநாதன் என்ற 3 விவசாயிகளும் சேலத்தில் சுரேஷ் குமார் என இதுவரையிலும் 9 பேர் இறந்திருக்கிறார்கள். இன்று வரையிலும் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

                         

மோனோ குரோட்டாபாஸ் மருந்தை சுவாசித்ததில் ஒரு விவசாயி இறந்து போகிறான் என்றால் இந்த  உயிர்க்கொல்லியான மருந்தை அனுமதித்தது யார்? இந்த அரசு, யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரையிலும் 9 விவசாயிகளின் உயிர் பறிபோயிருக்கிறது. இன்று வரையிலும் கலெக்டர் இறந்த விவசாயி குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்கியது உண்டா? அல்லது அவர்கள் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் சொன்னதுண்டா?. இறந்த 9 விவசாயிகளில் ஒருவருக்குக் காலில் புண் இருந்துள்ளது. மற்றொருவர் குடித்துவிட்டு பூச்சிக்கொல்லியைத் தெளித்திருக்கிறார் என அரசுக்கு அறிக்கை அனுப்பியிருக்கிறார் கலெக்டர். இறந்துபோன விவசாயிகளுக்கு அரசு  இழப்பீடு கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை.

                         

அவர்களின் இறப்பைக் கொச்சைப்படுத்த வேண்டாம். ஒரு குழு அமைத்து இதன் பாதிப்பை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பி.டி பருத்தியை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும். உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும், பாதிக்கபட்டவர்களின் குடும்பத்துக்கு  ரூ.2 லட்சமும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகள், மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்” எனக் கொந்தளிப்புடன் பேசினார்.


[X] Close

[X] Close