ஓய்வூதியம் வழங்காத அரசு...! சுதந்திர போராட்டத் தியாகியிடம் மன்னிப்புக் கேட்ட நீதிபதி | Chennai High Court Judge apologized to the freedom fighter

வெளியிடப்பட்ட நேரம்: 22:41 (25/01/2018)

கடைசி தொடர்பு:22:41 (25/01/2018)

ஓய்வூதியம் வழங்காத அரசு...! சுதந்திர போராட்டத் தியாகியிடம் மன்னிப்புக் கேட்ட நீதிபதி

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் காந்தி. இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர். 1945 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு ரங்கூன் சிறையில் இவர் அடைக்கப்பட்டிருந்தார்.

தியாகி


சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் வழங்கக் கோரி இவர் தமிழக அரசிடம் விண்ணப்பித்தார். அத்துடன், இந்திய தேசிய ராணுவத்தின் பெண் கேப்டனாக பணியாற்றியவரும் 2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் இடதுசாரிகளின் வேட்பாளராக போட்டியிட்டவருமான லட்சுமி ஷெகல் உள்ளிட்ட இருவரின் பரிந்துரை கடிதத்தையும் காந்தி இணைத்துள்ளார். ஆனால் அவரது விண்ணப்பம் அதிகாரிகளால் பரிசீலிக்கப்படாததை அடுத்து, 89 வயது காந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் அந்த மனுவில் தமக்கு ஓய்வூதியம் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

தியாகி


இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கே.ரவிச்சந்திர பாபு முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரரின் வயது தொடர்பாக சில குறைபாடுகள் இருந்ததால் சில ஆவணங்களை கோரியதாகவும், அவற்றை அவர் வழங்காததால் விண்ணப்பத்தை பரிசீலிக்கவில்லை எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, சுதந்திர போராட்ட வீரர் காந்திக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்ததோடு, ஓய்வூதிய பாக்கியை கணக்கிட்டு நான்கு வாரங்களில் வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு ஆணையிட்டார். மேலும், ஆங்கிலேயரிடமிருந்து நாட்டை மீட்கப்  போராடிய தங்களுக்கு, பிடிவாத அதிகாரிகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளுதற்காக இந்த நீதிமன்றம் மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் நீதிபதி தன் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.