’இதுதான் ஆன்மிக அரசியலா?’ - ஸ்டாலின் சொல்லும் புதுக் காரணம்

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று (25/01/2018)  நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ”நாம் தாய் மொழிக்கு மரியாதை செலுத்தும் இந்த நேரத்தில்தான், நம் தமிழ் தாய்க்கு அவமரியாதை செய்யும் சம்பவம் நடந்துள்ளது. அதைப்பற்றி விரிவாகப் பேச நான் விரும்பவில்லை. ஆனால் அதே நேரத்தில் அதற்கு உடனடியாக வருத்தம் தெரிவிக்காவிட்டால் உரிய நடவடிக்கைகளில் திமுக இறங்கும். தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிற நேரத்தில் தியானத்தில் இருந்ததால் எழுந்து நிற்க முடியவில்லை என்று அதற்கு ஒரு விளக்கம் சொல்லப்பட்டது. அப்படி என்றால் தேசிய கீதம் பாடும்போது மட்டும் எழுந்து நிற்கும்போது தியானம் வரவில்லையா? இப்போது எதற்கெல்லாமோ தியானம் செய்கிறார்கள். ஏற்கெனவே ஜெயலலிதா சமாதியில் ஒரு தியானம் நடந்தது. பதவிக்காக ஒரு தியானம். பதவி போய் விட்டதே என ஒரு தியானம். மீண்டும் அந்தப் பதவியைப் பெற வேண்டும் என்று ஒரு தியானம். தியானம் தியானம் என்று சொல்கிறார்களே ஒருவேளை இதுதான் ஆன்மிக அரசியலா?

ஸ்டாலின்

இது தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் அவர்களால் பன்படுத்தப்பட்டிருக்கும் இந்த மண்ணில் ஆன்மிக அரசியல் எப்போதும் எடுபடாது. அதனால் இந்த திராவிட இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் தொட்டுப்பார்க்க முடியாது. சாதாரணமாக சொல்கிறார்கள் கழகம் இல்லாத தமிழ்நாடு என்று. திராவிட இயக்கத்தை அழிப்பதாக மேடை போட்டு பேசுபவர்களுக்கு அந்தத் தகுதியையும், மேடையையும் அமைத்துக் கொடுத்தே திராவிட இயக்கம்தான்.

மத்தியிலுள்ள பாஜக அரசு சதி வலைகளைப் பின்னி தமிழகத்தில் தமிழுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. யாருடனும் கலக்காமல் 3,600 கோடி ரூபாய்க்குப் பேருந்துக் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. உடனடியாக அதனைக் குறைக்க வலியுறுத்தி முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் அதற்கு எந்த பதிலும் இல்லாததால் 27-ம் தேதி தோழமைக் கட்சிகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் 29-ம் தேதி முதல் விரும்பும் இடங்களில் மறியல் போராட்டம் நடத்தி சிறை நிரப்பும் போராட்டத்தை தொடர்வோம்.

ஸ்டாலின்

நிலக்கரி வாங்கியதில் ரூ.3,035 கோடி வரையில் ஊழல் நடந்துள்ளது. குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை அதிகாரிகளுக்குத் தொடர்பு உள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணை கோரியுள்ளோம். அந்த விசாரணை இறுதியில் அவர்கள் சிறைக்குச் செல்வார்கள். அதிமுக ஆட்சியை ஏன் கலைக்கவில்லையென மக்கள் எங்கள்மீது (திமுக) கோபப்படுகிறார்கள். நாங்கள் கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வர விரும்பவில்லை. எந்த ஆட்சியையும் அவ்வாறு கலைத்ததும் இல்லை. மாறாக திமுக ஆட்சிதான் இரண்டு முறை கலைக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். கட்சியினர் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!