'இதை தடுக்காவிட்டால் சில்லறை வணிகம் அழிந்துவிடும்'- விக்கிரமராஜா

”சில்லறை வர்த்தகத்தில் 100 சதவிகித அந்நிய முதலீட்டை மத்திய அரசு தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சில்லறை வணிகம் அழிந்துவிடும்” எனத் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பேருந்துக் கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களை கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால் விலைவாசி உயரும் நிலை இருப்பதால் இக்கட்டண உயர்வு அறிவிப்பை அரசு திரும்பப் பெற்று, குறைந்தபட்ச கட்டண உயர்வு செய்ய வேண்டும். கோவில்பட்டி நகருக்குள் 2.2 கி.மீ தூரத்திற்குள் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் ஆயிரம் கடைகள் வரை பாதிக்கப்படும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இக் கடைகளில் பணிபுரிந்து வந்த ஐயாயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து குடும்பத்துடன் வருமானத்துக்காக கஷ்டப்படும் நிலை உள்ளது. இந்தச் சாலை விரிவாக்கப் பணியின்போது பாதிக்கப்படும் கடைகளுக்கு இழப்பீடு வழங்குவதைப்போல வியாபாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் அரசு இழப்பீடு வழங்கிட வேண்டும். ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகள், தனியார் மருத்துவமனைகள், விடுதிகள், வணிக நிறுவனங்களுக்கு அதிகவரி விதிக்கப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகள் சுய லாபத்தோடு செயல்படுவதால் அரசுக்குக் கெட்டப் பெயர் ஏற்படும். கடந்த 2011ல் இருந்து 2017ம் ஆண்டு வரை வரியை மொத்தமாக செலுத்துவது சிரமம். இவ்வாறு பின்னோக்கி வரி வசூலிக்கும் செயலில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருவதைத் தடுக்கவும், இதற்கு தீர்வு காணவும் முதல்வரிடம் வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் புகார் மனு அளிக்க இருக்கிறோம். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் பேரமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க மாட்டேன் எனத் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். ஆனால், மத்திய அரசு இதனை சிங்கில் பிராண்டில் அனுமதித்துள்ளது. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு தற்போது 100 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதை மத்திய அரசு தடுக்காவிட்டால் சில்லறை வணிகமும் அழிந்துவிடும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!