டிராஃபிக் எஸ்.ஐ-யின் ஆபாசப் பேச்சால் தீக்குளித்த கார் டிரைவர் உயிரிழப்பு! | Chennai cab driver who immolates self today died

வெளியிடப்பட்ட நேரம்: 11:52 (26/01/2018)

கடைசி தொடர்பு:12:45 (26/01/2018)

டிராஃபிக் எஸ்.ஐ-யின் ஆபாசப் பேச்சால் தீக்குளித்த கார் டிரைவர் உயிரிழப்பு!

சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் போக்குவரத்துப் போலீஸார் தாக்கியதாக தீக்குளித்த கார் ஓட்டுநர் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

chennai
 

நேற்று முன் தினம் (24/01/2018) சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் போக்குவரத்துப் போலீஸார் தாக்கியதாக மணிகண்டன் என்ற கார் ஓட்டுநர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த அன்று பழைய மாமல்லபுரம் சாலையில் தனியார் நட்சத்திர விடுதி அருகே வேளச்சேரிக்குத் திரும்பும் இடத்தில் டிராஃபிக் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியே வந்த வாடகை கார் ஒன்றை போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அந்த காரை ஓட்டி வந்த மணிகண்டன் என்ற ஓட்டுநர் சீட்பெல்ட் அணியவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்துக் காவல் துணை ஆய்வாளர் தாமரைச் செல்வன் உள்ளிட்ட போலீஸார் விசாரித்தபோது, இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், மணிகண்டனை போலீஸார்  தாக்கியுள்ளனர். இதையடுத்து, காரில் இருந்த பெட்ரோலை எடுத்து தன் மேல் ஊற்றிக்கொண்ட மணிகண்டன், திடீரென தீவைத்துக் கொண்டார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீஸார் மற்றும் அப்பகுதி மக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மணிகண்டன் தீக்குளிப்பதற்கு முன்பு பதிவு செய்த வீடியோவில், ‘சீட் பெல்ட் அணியாததால் என்னை போலீஸார் தகாத வார்த்தைகளில் திட்டினர். இரும்புக் கம்பியால் அடித்தார்கள். என் குடும்பத்தை சேர்ந்த பெண்களையும் அவதூறாகப் பேசினர். என் சாதிப் பெயரைச் சொல்லி திட்டினர். என் ஓட்டுநர் உரிமம் அவர்களிடம்தான் உள்ளது’ என்று பேசி பதிவு செய்துள்ளார்.

இதனிடையே மணிகண்டனின் தாய் வசந்தா மற்றும் சகோதரிகள் நேற்று வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வ நாதனை சந்தித்துப் புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வசந்தா, ‘போக்குவரத்து போலீஸார் என் மகனிடம், தற்கொலைக்குத் தூண்டும் விதமாகப் பேசியுள்ளனர். இரும்புக் கம்பியால் தாக்கி, ஆபாசமாகப் பேசியுள்ளனர். என் மகனின் வருமானம் தான் எங்கள் குடும்பத்துக்கு உறுதுணையாக இருந்தது. எனவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீஸார் மீது கொலை முயற்சி, தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளேன்’ என்று குறிப்பிட்டார். 

இதில் சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் தாமரைச் செல்வனை நேற்று பணியிடை நீக்கம் செய்து சென்னைக் காவல் ஆணையர்  உத்தரவிட்டார். இந்நிலையில் தீக்குளித்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி இன்று (26ம்தேதி) கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் காலை உயிரிழந்தார். அவருக்கு 59% தீக்காயம் ஏற்பட்டிருந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிகண்டன் உயிரிழந்த நிலையில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முன் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க