'மனசு பொறுக்கல'- கொடிகாத்த குமரன் சிலையைப் பாதுகாத்த காங். நகரத் தலைவர்

இன்று நாடெங்கும் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால், பலரும் நம் நாடு விடுதலை பெற பாடுப்பட்டவர்களை மதிப்பதில்லை. அப்படிப்பட்ட சூழலில், கரூரில் உள்ள கொடிகாத்த குமரனின் சிலை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுவதை தடுக்க காங்கிரஸ் புள்ளி ஒருவர் இரும்புக் கூண்டு வைத்து, கொடிகாத்த குமரன் சிலைக்குப் பாதுகாப்பை ஏற்படுத்தியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் கரூர் நகரத் தலைவரான ஸ்டீபன்பாபு.

கரூர் நகர காவல்நிலையம் அருகே அமைக்கப்பட்டிருக்கிறது கொடிகாத்த குமரனின் சிலை. 65 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட இந்த சிலையைச் சுத்தி, எந்தப் பாதுகாப்பும் அம்சமும் இல்லாமல் இருந்தது. அதோடு, போதிய பராமரிப்பின்றியும் இருந்தது. அதோடு, சிலையின் தரைத்தளத்தில் சிலர் உட்கார்ந்து கொண்டும், படுத்துக் கொண்டும், எச்சில் துப்பியும் கொடிகாத்த குமரன் சிலையை அல்லல்படுத்தினர். சமீபத்தில், கொடிகாத்த குமரனின் நினைவு நாளின்போது தமிழக முதலமைச்சர் கரூர் வந்தார். அப்போதுகூட, இந்தச் சிலை சுத்தப்படுத்தபடாமல் இருந்தது. இன்று குடியரசு தினமும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்தான், தனது சொந்தப் பணம் அறுபதாயிரத்தை செலவு செய்து இரும்புக் கூண்டு செய்து, கொடிகாத்த குமரனின் நான்கு பக்கமும் அமைத்து, சிலைக்குப் பாதுகாப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஸ்டீபன்பாபு.

 அவரிடமே பேசினோம். ''நினைவுநாளின்போதுதான், கரூரில் அ.தி.மு.க அரசின் சார்பில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. முதல்வர் தொடங்கி அத்தனை அமைச்சர், எம்.எல்.ஏ-க்களும் இங்குதான் இருந்தார்கள். ஆனால், யாரும் குமரன் சிலையைக் கண்டுகொள்ளவில்லை. மாலை போடலை. நானும், என் நண்பரும் வந்து, குமரன் சிலையைக் கழுவி, மாலை போட்டோம். நகராட்சி நிர்வாகமும் குமரன் சிலையைக் கண்டுக்கலை. இதனால், பலரும் இந்தச் சிலையை எச்சில் துப்பும் இடமா மாத்திட்டாங்க. அதனால், மனசு பொறுக்காமத்தான் குமரன் சிலையைச் சுத்தி, எனது சொந்தச் செலவில் இரும்புக் கூண்டு அமைத்துப் பாதுகாப்பை ஏற்படுத்தியிருக்கிறேன். அதேபோல், திருப்பூர் குமரன் சிலைக்கு மின்விளக்குப் போடுவதற்கு கரூர் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளேன். நம் நாட்டு சுதந்திரத்துக்காக தங்களது இன்னுயிர்களை நீத்த இதுபோன்ற தியாகிகளை மதிக்காமல், அப்புறம் என்ன அர்த்தத்துல குடியரசு, சுதந்திரம் தினங்களைக் கொண்டாடுறோம்ன்னு தெரியலை" என்றார் வேதனை பொங்க!.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!