வெளியிடப்பட்ட நேரம்: 13:31 (26/01/2018)

கடைசி தொடர்பு:14:36 (26/01/2018)

காதலிக்காக நகையை ஃப்ரேம்போட்டு வைத்த கொள்ளையன்! சென்னையில் போலீஸை அதிரவைத்த சம்பவம்

திருடன்

காதலி நினைவாகக் கொள்ளையடித்த 11 சவரன் நகையை ஃப்ரேம்போட்டு வைத்த திருடனை சைதாப்பேட்டை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் குணசுந்தரி. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரைத் தாக்கிய மர்மநபர், 11 சவரன் நகை பறிக்கப்பட்டது. இதில் காயமடைந்த குணசுந்தரி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுதொடர்பாக சைதாப்பேட்டை போலீஸ் உதவி கமிஷனர் அனந்தராமன் தலைமையில் திருடனை போலீஸார் தேடி வந்தனர். போலீஸ் விசாரணையில், நகையைப் பறித்த மர்மநபர், சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ஜான்சன் என்பது தெரியவந்தது. அவர், அங்குள்ள இரும்புக் கடையில் வேலைப்பார்த்து வந்தார். இதையடுத்து ஜான்சனை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்த நகைகளை மீட்டனர். திருடிய நகைகளை ஜான்சன், வீட்டில் ஃப்ரேம் போட்டு  வைத்திருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். அதற்கு அவர் தெரிவித்த காரணத்தைக் கேட்டு போலீஸாரே அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "சைதாப்பேட்டை ஜோன்ஸ் தெருவில் ஜான்சன், சில ஆண்டுகளுக்கு முன்புவரை குடியிருந்தார். அப்போது. அங்கு ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்துள்ளார் அவர். ஆனால், அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிந்துவிட்டது. அதன்பிறகு அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் வேறு இடத்துக்குக் குடிபெயர்ந்து விட்டனர். இருப்பினும் அந்தப் பெண்ணை ஜான்சனால் மறக்க முடியவில்லை. ஜோன்ஸ் தெருவில் உள்ள நண்பர்களைப் பார்க்க வரும் ஜான்சனுக்கு அந்தப் பெண்ணின் நினைவால் தவித்தார். சம்பவத்தன்று குடிபோதையிலிருந்த ஜான்சன், காதலி வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்குள்ள பெண்ணைத் தாக்கியதோடு அவரிடமிருந்த 11 சவரன் நகையைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். போதையில் அந்த நகையை வீட்டில் ஃப்ரேம் போட்டு பத்திரமாக வைத்துள்ளார். போதை தெளிந்த பிறகுதான் கொள்ளையடித்த பெண், வேறு ஒருவர் என்று ஜான்சனுக்குத் தெரியவந்தது. இதற்கிடையில் எங்களிடம் ஜான்சன் சிக்கிவிட்டார்"  என்றனர்.