தென் மாவட்டப் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது! | Birds survey kick starts in Nellai district

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (26/01/2018)

கடைசி தொடர்பு:17:00 (26/01/2018)

தென் மாவட்டப் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது!

தென் மாவட்ட பறவைகள் கணக்கெடுப்புப் பணி இன்று தொடங்கியது. நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் வரும் 29-ம் தேதி வரை இந்தக் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. 

பறவைகள் கணக்கெடுப்பு

தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் 8-வது ஆண்டாக இன்று நடைபெற்று வருகிறது. மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள் சார் இயற்கைவள காப்பு மையம், நெல்லை மாவட்ட அறிவியல் மையம், தூத்துக்குடி முத்துநகர் இயற்கைச் சங்கம், நெல்லை இயற்கைச் சங்கம், ராமநாதபுரம் கோரமண்டல் கடல் பாதுகாப்பு அமைப்பு ஆகியவை இணைந்து இந்தக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. 

கணக்கெடுப்பில் பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 60 பேர் பங்கேற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு நெல்லை அறிவியல் மையத்தில் நேற்று (25ம்தேதி) பயிற்சி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று (26ம்தேதி) நெல்லை மாவட்ட நீர் நிலைகளில் கணக்கெடுக்கும் பணிகள் நடக்கின்றன. இது பற்றி பேசிய ஏ ட்ரீ அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான மதிவாணன், ’’சமீப காலமாக பறவைகள் வசிக்கும் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் நிகழ்ந்துள்ளன. அத்துடன் நீர் நிலைகளில் கழிவுகளைக் கொட்டுதல், நகரமயமாக்கம் போன்றவை நடக்கின்றன

அதனால் நீர் நிலைகளை நம்பி வாழும் பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகின்றன. பறவைகளையும் நீர்நிலை உயிரினங்களையும் பாதுகாப்பது குறித்த விழிப்பு உணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வழக்கமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டுமே கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு, முதல் முறையாக ராமநாதபுரம், குமரி மாவட்டங்களிலும் கணக்கெடுப்பு நடக்க உள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் வறட்சி பாதிக்கப்பட்டதாக இருந்த போதிலும், அங்கு 5 பறவைகள் காப்பகங்கள் உள்ளன. அதனால், தாமிரபரணி பாயும் செழிப்பான பகுதிகளில் மட்டும் அல்லாமல் வறட்சி பாதித்த பகுதிகளில் பறவைகள் எப்படி சமாளித்து வாழ்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கணக்கெடுப்பு வாய்ப்பாக அமையும் என நம்புகிறோம். நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் கணக்கெடுப்பு நடக்கிறது. 28-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திலும் 29-ம் தேதி குமரி மாவட்டத்திலும் கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது’’ என்றார். 

தன்னார்வலர்கள்

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது, கடுமையான வறட்சி நிலவியதால் 8,256 பறவைகள் மட்டுமே இருந்தன. அதற்கு முந்தைய ஆண்டுகளில் சராசரியாக 30,000 பறவைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு பருவமழை பெய்து நீர் நிலைகள் நிரம்பியதால் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் எனக் கணக்கெடுப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.