வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (26/01/2018)

கடைசி தொடர்பு:15:00 (26/01/2018)

கடத்தல் கும்பலை மிரளவைத்த போலீஸ்! சென்னையில் சினிமாவை விஞ்சிய சம்பவம்

 பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள்

சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த ரயிலின் அபாயச் சங்கலியை இழுத்து தப்பிய துப்பாக்கிக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் மடக்கிப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 வடமாநிலத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் கள்ளத்துப்பாக்கிகளைச் சிலர் கடத்திவருவதாக சென்னை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அவர்களை மடக்கிப்பிடிக்க போலீஸார் வியூகம் அமைத்தனர். சென்னை வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரகுமார் தலைமையிலான போலீஸார் ரயிலில் ஏறி துப்பாக்கிக் கடத்தல் கும்பலை மடக்கிப்பிடிக்க திட்டமிட்டனர்.

ஆனால், போலீஸார் கண்காணிப்பதை அறிந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், ரயிலின் அபாயச் சங்கலியை இழுத்து திருவொற்றியூர் அருகே கீழே குதித்தனர். இதை எதிர்பார்க்காத போலீஸார் அவர்களைத் துரத்தினர். துப்பாக்கி முனையில் அவர்கள் இருவரையும் போலீஸார் மடக்கிப்பிடித்தனர். அடுத்து, அவர்களிடமிருந்து நவீன ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், செல்போன்கள், கட்டுக்கட்டாகப்  2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் இருவரும் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பிரதீப், கமல் என்று தெரியவந்தது. அவர்கள் பின்னணி குறித்து சென்னை போலீஸார் துருவி, துருவி விசாரித்து வருகின்றனர். சினிமாவில் வருவதைப்போல நடந்த இந்தச் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 போலீஸாரிடம் சிக்கிய துப்பாக்கி கடத்தல் கும்பல்

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "கவுகாத்தியிலிருந்து சென்னை வழியாக திருவனந்தபுரத்துக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிலர் துப்பாக்கிகளைக் கடத்திவருவதாகத் தகவல் கிடைத்தது. இதனால், அவர்களை நாங்கள் பின்தொடர்ந்தோம். பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் துப்பாக்கிக் கடத்தல்காரர்களைப் பிடிக்க திட்டமிட்டோம். எங்களைப் பார்த்ததும் திருவொற்றியூரில் இறங்கிய கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஓடத் தொடங்கினர். அவர்களிடம் துப்பாக்கிகள் இருப்பதால் கவனத்துடன் அவர்களைப் பின்தொடர்ந்தோம். இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் மரணத்துக்குப்பிறகு கொள்ளையர்களைப் பிடிப்பதில் எச்சரிக்கையுடன் செயல்பட்டுவருகிறோம். ஒருகட்டத்தில் கொள்ளையர்களைத் துப்பாக்கி முனையில் எச்சரித்து சாதுர்யமாகப் பிடித்துள்ளோம். 5 நவீன ரக பிஸ்டல்கள், தோட்டார்கள், 2 லட்சம் ரூபாய், இரண்டு செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். எங்களிடம் சிக்கியவரில் ஒருவர் மீது வழக்கு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது"  என்றனர்.