தியாகி கட்டிய தேசிய சுதந்திர விநாயகர் கோயிலில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி! | Tuticorin: National flag hoisted in Vinayagar temple, which was built by freedom fighter

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (26/01/2018)

கடைசி தொடர்பு:16:30 (26/01/2018)

தியாகி கட்டிய தேசிய சுதந்திர விநாயகர் கோயிலில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி செந்தில் பெருமாள் கட்டிய விநாயகர் கோயிலில் குடியரசு தினத்தினை முன்னிட்டு கொடி ஏற்றப்பட்டது. தேசியக் கொடியை தியாகியின் பேரன் செந்தில்குமார் ஏற்றி இனிப்பு வழங்கினார். 

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள போரூரில் உள்ளது தேசிய சுதந்திர செந்தி விநாயகர் திருக்கோயில். இக்கோயிலை தியாகி செந்தில் பெருமாள் கடந்த 12.07.1948ல்  கட்டியுள்ளார். அன்றிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் இக்கோயிலின் அருகிலுள்ள கொடிமரத்தில் குடியரசு தினம் மற்றும் சுதந்திரதினத்தில் கொடி ஏற்றப்பட்டு வருகிறது. இன்றும் கொடி ஏற்றப்பட்டு விநாயகருக்குக் குடியரசு தின சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

இக்கோயிலை நிர்வகித்து வரும் தியாகியின் பேரனும், ஸ்ரீவைகுண்டம்  காங்கிரஸ் வட்டாரத் தலைவருமான செந்தில்குமாரிடம் பேசினோம். "எங்க தாத்தா செந்தில் பெருமாள், மகாத்மா காந்தி, வ.உ.சி, வாஞ்சிநாதன் ஆகியோருடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் மட்டுமல்லாமல் அவரது மனைவி லட்சுமி, அவரது மைத்துனர் பால்பாண்டி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மகாத்மா காந்தியின் உப்புச்சத்தியாகிரகப் போராட்டத்தை ஆறுமுகநேரி உப்பளப் பகுதியில் நடத்தி சிறை சென்றவர். தினமும் விநாயகரைக் கும்பிட்ட பிறகு தன் பணியைத் தொடங்கும் தாத்தா, சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்து வந்த 1946ம் ஆண்டு  இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக விநாயகர் கோயில் கட்டும் வேலையைத் தொடங்கினார். ஆனால், பல போராட்டங்களில் கலந்து கொண்டு பெல்லாரி, அலிப்புரம் சிறைகளில் தொடர்ந்து சிறைத்தண்டனை பெற்று வந்ததால், கோயில் கட்டும் பணி தடைபட்டது.  சுதந்திரத்துக்குப் பிறகு இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இக்கோயிலின் உள்பிரகாரத்தில் காந்தி, நேதாஜி சிலைகள் உள்ளன. தற்போது அவை சிதிலம் அடைந்துள்ளன.

இப்பகுதியில் போராட்டத்துக்கு வந்த காந்திஜியிடம் அந்தக் காலத்திலேயே சுதந்திரப் போராட்ட நிதியாக ரூ.3,000 கொடுத்தவர் என் தாத்தா. எங்க குடும்பத்தில் 3 போராட்ட தியாகிகள் இருந்தது மிகவும் பெருமைக்குரியது. அன்று முதல் இன்று வரை சுதந்திர தினம், குடியரசு தினத்தில் கொடி ஏற்றப்பட்டு  விநாயகருக்குச் சிறப்பு பூஜைகளும் நடக்கும்" என்றார். கொடியேற்றத்துக்குப் பின் தேசிய சுதந்திர விநாயகருக்கு பூஜைகள் நடத்தப்பட்டன. கொடியேற்றம், பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க