அதிகாலையில் மறிக்கப்பட்ட போலீஸ் ஜீப் ! திக், திக் நிமிடங்கள்... வேட்டையாடு, விளையாடு! - பகுதி -17 | police criminal chasing story part 17

வெளியிடப்பட்ட நேரம்: 17:21 (26/01/2018)

கடைசி தொடர்பு:17:21 (26/01/2018)

அதிகாலையில் மறிக்கப்பட்ட போலீஸ் ஜீப் ! திக், திக் நிமிடங்கள்... வேட்டையாடு, விளையாடு! - பகுதி -17

                 போலீஸ் அதிகாரிகளின் பாராட்டுப் பெறும் தனிப்படை போலீஸ் ஜி.லோகநாதன்

... வாசலில் எழுந்த திடீர் சலசலப்பைக் கேட்ட இன்ஸ்பெக்டர் நவீன், 'என்னவென்று பாருங்கள்' என்றார். அங்கே லோக்கல் ஆந்திர டவுன் போலீஸார், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். 'அதெப்படி, இவர்கள் அக்யூஸ்ட்டு கையைக் காட்டுகிற ஆட்களை விசாரிக்க ஆரம்பித்தால் அது நம்மைத்தானே பாதிக்கும். வியாபாரிகளின் ஆர்ப்பாட்டத்துக்கு உள்ளூர் வக்கீல்களும் துணைக்கு வருவார்கள். நம்முடைய போலீஸிலும் உதவிக்கு  வரமாட்டார்கள்...  இங்குள்ள நிலைமையை  சென்னை போலீஸே சொல்வது போல் ஆந்திர டி.ஐ.ஜி.க்கு எடுத்துச் சொல்லி விட்டு ஊருக்குப் போகச் சொல்லுங்கள்...  இந்த மூன்று அக்யூஸ்ட்டுகளையும் அவர்கள் கொண்டு போகட்டும்,  நாம் தடையாக இருக்க வேண்டாம். இங்கே வக்கீல், வியாபாரிகள், அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் ஒற்றுமையைப் பற்றி விசாரிக்க வந்த மெட்ராஸ் போலீஸுக்குத் தெரியாது' என்று ஏறக்குறைய கத்திக் கொண்டிருந்தனர். ஆந்திர டவுன் போலீஸார் உரையாடல் விவரத்தை இன்ஸ்பெக்டரிடம் சொல்ல நாங்கள் திரும்பிய போது அங்கே நவீன் சார் நின்றிருந்தார். 'எனக்கு எல்லாம் தெரியும், நானும்தான் அவர்கள் பேசுவதைக் கேட்டேன். இங்கே எந்தெந்த போலீஸார், அக்யூஸ்ட்டுகளுக்கு சப்போர்ட் செய்கிறார்கள் என்பதை தெரிவிக்கும் படி டி.ஐ.ஜி. சுரேந்திரபாபு சார் ஏற்கெனவே சொல்லியிருந்தார். நானும், அந்த விவரங்களைக் கொடுத்து விட்டேன். இந்த  மணல்கோட்டை, ரெட் ஏரியாவுக்கு ஸ்பெஷல் டீம் தவிர யாரும் வர மாட்டார்கள் என்றுதான் நம்மிடம் சொல்லியிருந்தார்கள், ஆனால் லோக்கல் டவுன் போலீசாரே இவ்வளவு பேர், இங்கே வந்துள்ளனர் என்றால் இதன் பின்னால் ஏதோ நடந்திருக்கிறது.  துணை கமிஷனர் மௌர்யா சாருக்கு இந்த விஷயத்தை எங்கள் டீம் போலீஸ் மூலம் சொல்லி விட்டோம். 'உங்கள் பாணியிலேயே ரெக்கவரியைச் செய்யுங்கள், எதற்கும் தயங்க வேண்டாம்' என்று அவர் சிக்னல் கொடுத்து விட்டார். ஜே.சி. சைலேந்தர் சாருக்கு, டி.சி., சூழ்நிலையைச் சொல்லி விட்டார். ஜீப்பை ரெடி பண்ணுங்க. இவங்க மூன்று பேரையும் தனித்தனியா சங்கிலியில் கட்டுங்க. நம்ம போலீஸ் நாலு பேரு வெப்பனோடு இங்கேயே நில்லுங்க. நாம் கிளம்பிப் போகலாம் வாங்க, வாங்க' என்றபடி நவீன்சார் ஜீப்பை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டார். அவர் போகும் வேகத்தை வைத்தே  அவர் எங்கே போகிறார் என்று ஊகிக்க முடிந்தது. நாங்கள் பின்னால் வேகமாக நடந்தோம். பேருந்தில் புட்போர்டு அடிப்பது போல் மொத்த டீமும் ஒரே ஜீப்பில் ஏறிக்கொண்டோம். எங்களைப் பின் தொடர்ந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த லோக்கல் போலீஸாரை நாங்கள் கண்டுகொள்ளவேயில்லை.  

                 போலீஸ் கமிஷனர் கே.விஜயகுமார், இன்ஸ்பெக்டர் என்.நவீன் (பழையபடம்)

திருட்டு நகைகளை வாங்கிய வியாபாரிகளை இரவே 'தூக்கி' டலாம் என்று இன்ஸ்பெக்டர் சொன்னதை அந்த இரவு கேட்கவில்லை. மெள்ள மெள்ள நகர்ந்து வெளிச்சத்தைத் துணைக்கு வரவழைத்துக் கொண்டிருந்தது. மணல்கோட்டை, ரெட் ஏரியாவை விட்டு ஜீப் வெளியே கிளம்பியபோது அதிகாலை ஐந்துமணி.மெயின் ரோட்டைப் பிடித்து விட்டால் போதும் என்ற இலக்கோடு ஜீப் வேகம் பிடித்து பறந்து கொண்டிருந்தது. பஜார் வீதிக்குள் ஜீப் நுழைந்ததும், ஜீப்பில் உடனிருந்த ஆந்திர ஸ்பெஷல் டீம் எஸ்.ஐ.யிடம், 'தம்பி, அட்ரஸை நீங்க வாங்கித் தர்றீங்களா, அல்லது நாங்களே வாங்கிக் கொள்ளட்டுமா?' என்று நவீன் சார் கேட்டார். 'சார், அவங்க லோக்கல் போலீஸ், அப்படித்தான் இருப்பாங்க, நீங்க சொன்னதுமே நான் வியாபாரிகளின் அட்ரஸை வாங்கி விட்டேன் சார்' என்றவர் டிரைவரிடம், 'நேரா போயி இரண்டாவது லெப்ட் எடுத்து ஜீப்பை கார்னரில் நிறுத்துங்க... அங்கிருந்து மூன்றாவது வீடுதான்' என்றார். ஆந்திர ஸ்பெஷல் டீம் எஸ்.ஐ., சொன்ன இரண்டாவது லெப்ட்  கண்ணுக்குத் தெரிவதற்குள் எங்கள் கண்ணுக்குத் தெரிந்தது, அங்கே திரண்ட கூட்டம்தான். இரண்டாவது தெருவின் பாதியிலேயே ஜீப்பை ஓரம் கட்டி நிறுத்த வேண்டியதாகி விட்டது. கூட்டத்தைப் பார்த்து விட்டு, ஜீப்பை நிறுத்துவது போலீஸுக்கு  பலகீனமான அறிகுறிதான் என்றாலும், சூழ்நிலையைப் பொறுத்துதான் முன்னேற வேண்டும் என்பதையும் பார்க்க வேண்டும். நாங்கள் முன்னேறிப் போகாமல் ஜீப்பை நிறுத்தியதும் அந்த கும்பலில் இருந்து பலமடங்கு  மகிழ்ச்சி வெளிப்பட்டது.  ஜீப்பின் எஞ்சின் சூடு குறைவதற்குள் நாங்கள் அந்தக் கும்பலை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.  நாங்கள் நடந்து வருவதைப் பார்த்ததும் எங்களுக்கு எதிரே அந்தக் கும்பலும் நடந்து வர ஆரம்பித்தது. நாங்கள் மூன்றாவது வீட்டை அடைய இன்னும் பத்து அடி தூரம்தான்..அந்தக் கும்பல் எங்களை நெருக்கியபடி வளையம் அமைத்தது. எதையும் நாங்கள் கண்டு கொள்வதாக இல்லை. ஆனால் அந்த வளையத்தின் இறுக்கத்தால் நாங்கள் எடுத்து வைக்கும் அடியின் வேகம் தடைபட்டது.

ஏ.ஜி.மௌர்யா (ஓய்வு ஐ.ஜி)முன்னூறு அடி தூரத்தை சாதாரணமாகக் கடந்து வந்த எங்களுக்கு வெறும் பத்தடி தூரம், நெடும்பயணம் போல் ஆகிவிட்டது. இன்னும் ஐந்தடி... மூன்றடி... இரண்டடி... மூன்றாவது வீட்டின் வாசல்படியில் கால்வைக்க தேவை ஒரு அடிதான். வாசலில் நின்ற கும்பலும், பின்னால் இருந்து அழுத்தம் தரும் கும்பலும் குறைந்த தண்ணீருடன் போகும் தண்ணீர் லாரி போல முன்னும், பின்னும் எங்களை அலையடிக்க வைத்தது.  ஜீப்பை நிறுத்தி விட்டு நாங்கள் அங்கேயே நின்றபோது, ஓ வென  கத்தியவர்கள் நாங்கள் நடந்தே அந்த வீடுவரை வருவோம் என்பதைக் கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லை. முன்னூறு அடிதூரத்தைக் கடக்கும் வரையில் நாங்கள் யாரிடமும் பேசவில்லை, அந்தக் கும்பலும் எங்களிடம் பேச முயற்சிக்க வில்லை.  இது போன்ற நேரங்களில் உளவியல் ரீதியான அணுகுமுறைதான் எப்போதும் கைகொடுக்கும் அதை இன்ஸ்பெக்டர் நவீன் சார் அருமையாகக் கையாளக் கூடியவர்.  தொட்டுவிடக் கூடிய தூரத்தில் நகை வாங்கிய வியாபாரியின் வீட்டைப் பார்த்துக் கொண்டே நாங்கள் அடுத்த அடிக்கு முன்னேறியதும்... கும்பலில் இருந்து ஒருவர், 'சார், எங்கே போறீங்க? இது யார் வீடு என்று தெரியுமா?' என்றபடி எங்கள் அருகில் வந்தார். அவர் கையில் காக்கி நிறக் கவரில் சில பேப்பர்கள் இருந்தது.  முன் ஜாமீன் ஆர்டர் காப்பியாக இருக்கக் கூடும். சில நொடிகள் கழித்து இன்ஸ்பெக்டர் அவர்களிடம்,   'நீங்கள் யார் ? உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்?' என்றார். இன்ஸ்பெக்டரைக் கேள்வி கேட்டவர்,  'நீங்கள் எங்கள் வியாபார சங்கத் தலைவரைக் கைதுசெய்ய வந்திருப்பதாகச் சொன்னார்கள். அதற்கு நாங்கள் அனுமதிக்க மட்டோம்'  என்று அந்த வீட்டுக்கு முன்பு மறித்தபடி நின்று கொண்டார். 'நாம் வந்த வேலை சீக்கிரம் முடிந்து விடும் போலிருக்கிறதே?' என்ற ஆனந்தம் இன்ஸ்பெக்டர் கண்களில் ததும்பியதை அப்போது பார்த்தோம். எந்த ரூட்டைப் பிடித்திருக்கிறார் என்பது தெரியவில்லையே என்ற குழப்பமும் எங்களுக்குள் நீடித்தது.

தனிப்படை எஸ்.ஐ.ராஜ்குமார் (அன்று)நகை ரெக்கவரி செய்யும் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளப் போவதாகச் சொன்ன ஆந்திர போலீசில் பாதிபேர், ஜீப் நிறுத்திய இடத்தை விட்டு வரவேயில்லை.   ஆந்திராவின் ஸ்பெஷல் டீம் எஸ்.ஐ.கள் இரண்டுபேர் மட்டும் எங்களோடு இருந்தனர். அப்போது இன்ஸ்பெக்டர், 'திருட்டு  நகைகளை வாங்கியது முதல்குற்றம். அதை விசாரணை போலீசிடம் கொடுக்க மறுப்பது, அடுத்த குற்றம், இப்படி பெரிய கூட்டத்தை திரட்டிக் கொண்டு வந்து போலீசாரை மிரட்டி, பணியைச் செய்யவிடாமல் தடுப்பது அதைவிட பெரிய குற்றம். நகைகளைத் திருடியவர்கள் எங்களிடம் வாக்குமூலம் கொடுத்து விட்டனர். நகைகளை வாங்கியவர்கள் 'பையர்' என்ற அடிப்படையில் குற்றவாளிகள்தான்... இங்கே சட்டம் தெரிந்த யாராவது இருக்கிறீர்களா?' என்று ஒன்றுமே தெரியாதவர் போல் அந்தக் கூட்டத்தைப் பார்த்துக் கேட்டார். கூட்டத்தில் இருந்து பதிலே வரவில்லை. 'சரி நானே சொல்கிறேன், கேட்டுக் கொள்ளுங்கள்' என்று நவீன் சார் பேச ஆரம்பித்தார். 'நாங்களே ஒவ்வொரு நகை வியாபாரிகளின் வீடுகளாகத் தேடிப்போய் விசாரனை நடத்தி நகைகளைப் பறிமுதல் செய்வது எங்களுக்கு சாதாரண விஷயம், இப்படிச் செய்யப் போவதை உங்கள் அரசின் உள்துறைக்கும், போலீஸ் ஐ.ஜி.க்கும் தெரிவித்து விட்டுத்தான் வந்திருக்கிறோம். இதேபோல் குற்றவாளிகளைத் தேடிக்கொண்டு ஆந்திர போலீசார் சென்னைக்குப் பலமுறை வந்து இருக்கிறார்கள்... அவர்களை சும்மா இருக்க வைத்து விட்டு நாங்களே ஸ்பாட்டுக்குப் போய் பல குற்றவாளிகளைக் கைது செய்து அவர்களிடம் கொடுத்துள்ளோம். இது ஒவ்வொரு மாநிலக் காவல்துறையிலும் நடைமுறையில் இருக்கிறது. யாரையும் அவமானப்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் இல்லை. நீங்கள் ஏதாவது ஒரு இடத்தைக் குறிப்பிட்டுச் சொல்லுங்கள், நாங்கள் அங்கேபோய் காத்திருக்கிறோம். நகைகளின் லிஸ்ட்டை உங்களிடமே கொடுக்கிறோம். நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து அந்த நகைகளை ஒப்படைத்து விட்டால் கூட போதும். நாங்கள் எங்கள் போலீஸ் கமிஷனரிடம் உங்களுக்காக பேசி, நகையை வாங்கிய வியாபாரிகளை  வழக்கில் சேர்க்காமல் விட்டு விடச் சொல்கிறேன்... ஆனால், அடுத்தமுறை இதேபோல் ஒரு வழக்குக்காக நாங்கள் ஆந்திரா வருகிற சூழ்நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக நகையை வாங்கியவர்களை கைது செய்து கொண்டு போய்விடுவோம். பேசி விட்டுச் சொல்லுங்கள், நாங்கள் நாளைக்கு பீகார் போக வேண்டியிருக்கிறது. இப்போது மாட்டியிருக்கும் அக்யூஸ்ட்டுகள் சாதாரணமான ஆள்கள் இல்லை...' என்றார்.
அப்போது கூட்டத்திலிருந்து...
 


டிரெண்டிங் @ விகடன்